ஜவான் படம் இத்தனை படங்களின் காப்பியா.. எல்லாத்தையும் தட்டி தூக்கிய நெட்டிசன்கள்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஜவான். தமிழில் மெர்சல், தெறி உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கிய அட்லி கடைசியாக விஜய்யை வைத்து பிகில் திரைப்படத்தை இயக்கி இருந்தார். அந்த படத்தை தொடர்ந்து அவர் தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ளார். இந்த படத்தில் ஷாருக்கானுடன் இணைந்து நயன்தாரா, யோகி பாபு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தென்னிந்தியாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா இந்த திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக இருக்கிறார். கடந்த 2020ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த திரைப்படம் இடையில் ஏற்பட்ட சில பிரச்சினைகளின் காரணமாக தாமதமாகி வருகிறது. இந்நிலையில் தற்போது சில நாட்களுக்கு முன்பு படத்திற்கு ஜவான் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்தது.

அதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதில் ஷாருக்கான் ரத்தக்களறி உடன் இருக்கிறார். மேலும் முகம், கை ஆகிய இடங்களில் ஒரு துணியைக் கட்டிக்கொண்டு பயங்கர மிரட்டலாக இருக்கிறார். கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஷாருக்கான் நடிப்பில் படம் வெளிவர இருப்பதால் பாலிவுட்டில் இப்படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருக்கிறது.

அடுத்த ஆண்டு ஜூன் 2ம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாக இருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போது வெளியாகியிருக்கும் இந்த டீசரில் பல திரைப்படங்களின் காப்பி இருப்பதாக நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக இயக்குனர் அட்லி இயக்கும் திரைப்படத்தில் ஏதாவது ஒரு பழைய திரைப்படத்தின் சாயல் கண்டிப்பாக இருக்கும். இதனால் தமிழ் ரசிகர்கள் பலரும் அவரை காப்பி இயக்குனர் என்று கிண்டலடித்து வந்தனர். ஆனால் பாலிவுட்டில் அவர் படம் இயக்க இருப்பதால் நிச்சயம் மற்ற படங்களின் சாயல் இருக்காது என்று நினைத்த நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் டீசர் பல படங்களை நினைவுப்படுத்துகிறது.

இந்த டீசரின் பின்னணி இசை பிகில் படத்தில் வருவது போன்றும், துப்பாக்கி சத்தம் போன்றவை விக்ரம் ட்ரைலர் சாயலிலும் இருக்கிறது. மேலும் தமிழில் எஸ் ஜே சூர்யா, மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ஸ்பைடர் திரைப்படத்தின் ஒரு காட்சியில் எஸ்ஜே சூர்யா முகத்தில் கோணியை கட்டிக் கொண்டு வருவார்.

இந்த டீசரை பார்க்கும்போது அந்தப் படம் தான் நினைவுக்கு வருவதாக நெட்டிசன்கள் தற்போது அட்லியை கலாய்த்து வருகின்றனர். மேலும் பொது இடத்தில் இரத்தக்களரியாக துப்பாக்கி சகிதம் ஒருவர் இருந்தால் உடனே போலீஸ் அவரை உள்ளே தூக்கி வைத்து சம்பவம் பண்ணி விடுவார்கள், இது என்ன லாஜிக் என்று ரசிகர்கள் டீசரை பார்த்து கிண்டல் செய்து வருகின்றனர். இருப்பினும் டீஸர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்