ரிலீஸ் சிக்கலில் மாட்டிக் கொண்ட ஜீவி பிரகாஷின் படம்.. கோர்ட்டு வரை சென்ற விவகாரம்

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் ஜெயில். இப்படத்தை கிரெய்க்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஜி வி பிரகாஷ் உடன் இணைந்து அபர்ணதி, ராதிகா சரத்குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

அபர்ணதி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் ஆர்யா பங்குபெற்ற எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலம் அடைந்தவர். ஜெயில் திரைபடம் இன்னும் சில நாட்களில் திரைக்கு வர தயார் நிலையில் உள்ளது.

இந் நிலையில் இத்திரைப்படத்தை வெளியிட தடை கோரி ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, ஜெயில் படத்தை தயாரித்துள்ள கிரெய்க்ஸ் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தின் காப்புரிமை,  ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட விநியோக உரிமையை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு வழங்கி கடந்த மாதம் ஒப்பந்தம் செய்துள்ளது.

படத்தின் அனைத்து உரிமையும் தங்கள் நிறுவனம் பெற்றிருந்த நிலையில் திடீரென தயாரிப்பு நிறுவனம் ஜெயில் படம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி வெளிவர உள்ளதாக அறிவித்தது. மேலும் இந்த படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை எஸ் எஸ் ஐ புரொடக்ஷன்ஸ் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுதவிர ஜெயில் படத்தின் ஓடிடி மற்றும் சாட்டிலைட் உரிமையையும் விற்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளது. ஒட்டு மொத்த உரிமையையும் தங்கள் நிறுவனம் வாங்கி ஒப்பந்தம் செய்துள்ள நிலையில் சட்ட விரோதமாக படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்வதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதை விசாரித்த நீதிபதி ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு இந்த வழக்கு குறித்து ஜெயில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இன்னும் ஒரு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கின் விசாரணை டிசம்பர் 3 அன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதனால் ஜெயில் திரைப்படம் குறித்த தேதியில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதே போன்று சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம்  பல பிரச்சனைகளை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை