தமிழகத்தில் எக்கச்சக்கமான ரசிகர்களை தன்வசப்படுத்தி இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் வருகை தொடர்பான பேச்சுக்களால் அவ்வப்போது தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கும். ஏனென்றால் நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017 ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்திருந்தார்.
இதனால் அவரது ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதற்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு கடந்த சட்டமன்ற தேர்தலில் ரஜினியின் கட்சி களம் காணும் என எதிர்பார்த்தனர். ஆனால் ரஜினிக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டதால் அரசியலிலிருந்து விலகும் முடிவை அறிவித்திருந்தார்.
அதன் பிறகு உலகநாயகன் கமலஹாசன் ஆரம்பித்த மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் இணைந்து ரஜினி பணியாற்றுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு தற்போது ஏமாற்றமே மிச்சம். மேலும் ரஜினி அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்ற கேள்விக்கு ஆணித்தரமான பதிலை எதிர்பார்த்த அவரது ரசிகர்களுக்கு தற்போது அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டிருக்கிறார்.
இன்று ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், ஆளுநரிடம் தற்போதய அரசியல் பற்றி விவாதித்ததாக கூறினார். அதைப்பற்றி தற்போது பகிர்ந்து கொள்ள முடியாது என்று கூறினார்.
தமிழகத்தில் உள்ள ஆன்மீக உணர்வு ஆளுநருக்கு பிடித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பற்றி விவாதித்தீர்களா? என்று கேட்டதற்கு இப்போதைக்கு சொல்ல முடியாது என்று கூறினார். மறுபடியும் அரசியலுக்கு வரும் எண்ணம் உள்ளதா? என்று செய்தியாளர்கள் கேட்டுள்ளனர் .
அதற்கு ரஜினி சிரித்துக்கொண்டே, ‘அரசியலுக்கு வரும் எண்ணம் எதுவும் இல்லை’ என்று கூறினார். மேலும் தயிர், அரிசி, பால் பாக்கெட்டுகளுக்கு ஜிஎஸ்டி வரி உயர்வு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அது பற்றி கருத்து கூற விரும்பவில்லை என்றும் ரஜினி கூறினார்.