கலாய்த்தவர்களுக்கு பதிலடி கொடுத்த ஆண்ட்டி இந்தியன்.. தன்னை நிரூபித்த ப்ளூ சட்டை மாறன்

ஒரு திரைப்படத்தை பற்றி தன்னுடைய வெளிப்படையான கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் பிரபலமானவர் ப்ளூ சட்டை மாறன். இவர் கழுவி ஊற்றாத படங்களே இல்லை என்று கூறலாம். அந்த அளவுக்கு பெரிய இயக்குனர்கள் படம் முதல் சிறிய பட்ஜெட் படம் வரை அனைத்து படங்களையும் விமர்சித்து வந்தார்.

அவரின் இந்த அதிரடியான விமர்சனங்களுக்கு ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு படத்தைப் பற்றி பேசுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது என்றெல்லாம் கேட்டார்கள். ஆனால் அதற்கு பதிலடி தரும் வகையில் தற்போது ஆன்ட்டி இந்தியன் என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.

இப்படம் வெளிவருவதற்கு முன்பு இருந்தே பல சர்ச்சைகளை சந்தித்து வந்தது. அதையெல்லாம் தாண்டி தற்போது ஆன்ட்டி இந்தியன் படம் திரையில் வெளியாகியுள்ளது. படம் வெளியானால் அவரை நன்றாக கலாய்த்து தள்ளலாம் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

ஏனென்றால் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு அழுத்தமான கதையை தைரியமாக முன் வைத்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். நம் சமூகத்தில் நிகழும் அவலங்களும் அதை சரி செய்ய அரசியல்வாதிகளும், காவல்துறையும் என்ன செய்கிறார்கள் என்பதை பற்றியும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

மேலும் இவர் வழக்கமாக ஒரு திரைப்படத்தைப் பற்றி என்ன என்ன குறைகளை எல்லாம் சொல்வாரோ, அதை எல்லாம் தன்னுடைய படத்தில் செய்யாமல் மிக நேர்த்தியாக, கவனமாக திரைக்கதையை கொண்டு சென்றுள்ளார்.

இருப்பினும் இப்படம் வெளியாக கூடாது என்று கோர்ட்டு வரை சென்ற பலரும் இது இந்தி படத்தின் காப்பி என்று சொல்லிப் பார்த்தனர். ஆனால் அது எதுவும் வேலைக்கு ஆகவில்லை. அந்த அளவுக்கு படம் சிறப்பாக இருப்பதாக பலரும் கூறுகின்றனர்.

பெரிய பட்ஜெட், பெரிய ஹீரோ என்று எதுவும் இல்லாமல் கதையை மட்டும் நம்பி படம் எடுத்து தன்னை நிரூபித்திருக்கிறார் ப்ளூ சட்டை மாறன்.