புதுசா ஓட்டு போடறிங்களா.? உங்க வாக்கு சாவடி எங்க தெரியுமா.? பதட்டப்படாமல் இத ஃபாலோ பண்ணுங்க

Tamilnadu Election 2024: நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதில் தமிழ்நாட்டில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு தொடங்க உள்ளது.

கடந்த சில வாரங்களாகவே தமிழகம் முழுவதுமே அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. இன்று மாலையோடு அது முடிவுக்கு வரும் நிலையில் ஓட்டு போடுவது குறித்த பல சந்தேகங்கள் மக்களுக்கு இருக்கிறது.

அதிலும் புதிதாக ஓட்டு போடுபவர்களுக்கு ஒரு சிறு பதட்டம் இருக்கும். வாக்குச்சாவடி எங்கே? என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்? போன்ற பல கேள்விகள் அவர்களுக்கு இருக்கும்.

வாக்கு சாவடியை கண்டுபிடிப்பது எப்படி

ஆனால் கவலையே வேண்டாம் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினாலே போதும். அதன்படி வாக்காளர்களுக்கு பூத் ஸ்லிப் ஒன்று கொடுக்கப்படும். அதில் எங்கு ஓட்டு போட வேண்டும் என்ற விவரம் தெளிவாக இருக்கும்.

அதுவும் இல்லை என்றால் உங்கள் செல்போனில் EPIC என டைப் செய்து சிறிது இடைவெளி விட்டு வாக்காளர் அடையாள அட்டை எண்ணை டைப் செய்ய வேண்டும்.

அதை 9444123456 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப வேண்டும். அதன் பிறகு சில நிமிடங்களிலேயே வாக்காளரின் பெயர், எங்கு வாக்களிக்க வேண்டும், வாக்கு சாவடியின் முகவரி ஆகியவை தெளிவாக உங்களுக்கு எஸ் எம் எஸ் வழியாக வந்துவிடும்.

வாக்களிக்கும் முன் கவனிக்க வேண்டியது

பின் தேர்தல் நாளன்று ஓட்டு போட போகும் போது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் பூத் ஸ்லிப் இரண்டையும் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒருவேளை வாக்காளர் அடையாள அட்டை இல்லை என்றால் ஆதார் கார்டு, பேங்க் பாஸ் புக், பான் கார்டு, பாஸ்போர்ட் போன்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை எடுத்துச் செல்லலாம்.

அதன் பிறகு வாக்குச்சாவடியில் இருக்கும் அதிகாரியிடம் பூத் ஸ்லிப் மற்றும் அடையாள அட்டையை கொடுக்க வேண்டும். அவர் அதை சரி பார்த்து விட்டு 17A படிவத்தை வழங்குவார்.

அதில் நீங்கள் கையெழுத்திட்ட பிறகு உங்கள் விரலில் மை வைக்கப்படும். அதன் பிறகு நீங்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவீர்கள்.

வாக்கை பதிவு செய்வது எப்படி

EVM இயந்திரத்திற்கு முன்பு நீங்கள் சென்றதும் அங்கு யாருக்கு வாக்களிக்க விருப்பமோ அந்த வேட்பாளரின் சின்னத்திற்கு அருகில் இருக்கும் பட்டனை அழுத்த வேண்டும்.

அதை தொடர்ந்து ஒரு பீப் சத்தத்துடன் சிவப்பு விளக்கு எரியும். அப்படி என்றால் உங்கள் வாக்கு பதிவு செய்யப்பட்டு விட்டது என்று அர்த்தம். பிறகு திரையில் நீங்கள் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பது காட்டப்படும்.

அதை உறுதி செய்துவிட்டு நீங்கள் வெளியேறலாம். இதில் ஏதேனும் தவறு இருந்தால் அருகில் இருக்கும் அதிகாரியிடம் நீங்கள் சொல்லலாம்.

மேலும் நீங்கள் நோட்டாவுக்கு ஓட்டு போட வேண்டும் என்றால் இயந்திரத்தின் கடைசியில் அந்த பட்டன் இருக்கும். அதை அழுத்த வேண்டும்.

இப்படியாக நீங்கள் உங்கள் வாக்குகளை பதிவு செய்யலாம். அப்படியும் உங்களுக்கு பதட்டமாகவோ சந்தேகமாகவோ வேறு பிரச்சனையோ இருந்தால் 1950 என்ற ஹெல்ப் லைன் நம்பருக்கு தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்