வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

த.வெ.க முதல் மாநாட்டிற்கு இவங்க யாரும் வர வேணாம்.. விஜய் அதிரடி உத்தரவு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமான நடந்து வருகின்றன. இந்த நிலையில், மாநாட்டிற்கு இவர்கள் எல்லாம் வர வேண்டாம் என விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சினிமாவில் இருந்து அரசியல்

அரசியலில் குதிக்க அனைவரும் ஆசைப்படுவது இயல்புதான். ஆனால் அதில் குதித்த பின் மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? தேர்தலில் வெற்றி கிடைக்குமா? தோல்வி வருமா? அரசியலில் நிலைக்க முடியுமா? இதெல்லாம் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் வருவது இயல்புதான். ஆனால், சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து சாதித்தவர்கள் குறைவானோர் தான். அந்த வகையில், கருணா நிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர், விஜயகாந்த், பவன் கல்யாண் உள்ளிட்டோர் தான் அரசியலில் தனக்கென இடத்தைப் பிடித்து மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு!

அந்த வரிசையில் தமிழக அரசியலில் விஜய் களமிறங்கியுள்ளார். இதுவரை அரசியலில் வெளிப்படையாக கருத்து தெரிவிக்காத அவர் பிப்ரவரியில் கட்சி ஆரம்பித்த பின், சமீபத்தில் கொடியையும், கொடிப்பாடலையும் அறிமுகம் செய்தார். அதன்பின் செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் மாநாடு நடத்துவதாக அறிவித்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போய், வரும் அக்டோபர் 27 ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் பிரமாண்டமாக நடக்கவுள்ளது.

இதற்காக அக்கட்சி தலைவர் விஜய், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் அறிக்கை வாயிலாகவும், அறிவிப்புகள் வெளியிட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளனர். இம்மாநாட்டிற்கு காவல்துறையிடம் அனுமதி பெறப்பட்ட நிலையில், மாநாட்டு பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஏற்கனவே மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் தொண்டர்களுக்கு விஜய் கடிதம் எழுதி, சிறப்பான முறையில் மாநாடு நடக்க ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில், உடல் நலமின்றி இருப்பவர், கர்ப்பிணிப்பெண்கள், முதியவர்கள், சிறுவர், சிறுமியர் உள்ளிட்டோரை மாநாட்டிற்கு வர வேண்டாம் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

விஜய் இன்று வெளியிட்ட அறிக்கை

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’இந்த நெகிழ்வான நேரத்தில், முக்கியமான ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். கழகத் தோழர்கள் எல்லோரையும் போலவே கர்ப்பிணிப் பெண்கள், பள்ளிச் சிறுவர் சிறுமியர், நீண்ட காலமாக உடல்நலமின்றி இருப்பவர்கள், முதியவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறுஊர்களில் இருந்து நம் மாநாட்டுக்கு வரத் திட்டமிட்டு இருப்பர். அவர்களின் அந்த ஆவலைநான் மிகவும் மதிக்கிறேன். உங்கள் எல்லோருடனும் அவர்களையும் மாநாட்டில் காணவேண்டும் என்ற ஆவல்தான் எனக்கும் இருக்கிறது. ஆனால், எல்லாவற்றையும்விட அவர்களின் நலனே எனக்கு மிக மிக முக்கியம்.

மாநாட்டிற்காக அவர்கள் மேற்கொள்ளும் நீண்ட தூரப் பயணம், அவர்களுக்கு உடல்ரீதியாகச்சிரமத்தை ஏற்படுத்தக் கூடும். அதனால், அவர்கள் இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வர வேண்டாம்என்றே அவர்களின் குடும்ப உறவாகவும் இருக்கும் உரிமையில் அன்புடன்கேட்டுக் கொள்கிறேன். ஊடக மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக, தங்கள் வீடுகளில் இருந்தேநமது வெற்றிக் கொள்கைத் திருவிழாவில் கலந்து கொள்ளலாம் என்றும் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

மாநாட்டுக்கு வருகின்ற மற்ற அனைவரும், மாநாட்டுக்கு வந்து செல்லும்போது, பாதுகாப்புடன் பயணிப்பது மிக மிக முக்கியம். அதேபோல, பயண வழிகளில் அரசியல் ஒழுங்கையும்நெறிமுறைகளையும் போக்குவரத்து விதிமுறைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். நாம் எதைச் செய்தாலும், அதில் பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டையும் காப்போம் என்பதை உணர்த்துமாறு செயல்பட்டால் தான் நம் செயல்கள் மிக நேர்த்தியாக அமையும்.

அரசியலுக்கும் அது பொருந்தும். நாம் எப்போதும் மற்றவர்களுக்குஎடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும். எந்நாளும் இதை ஒரு கட்டுப்பாட்டு விதியாகவே கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வி.சாலை என்னும் விவேக சாலையில் சந்திப்போம். வெற்றி நிச்சயம்.’’ என்று தெரிவித்துள்ளார்.

தொண்டர்கள் நெகிழ்ச்சி

விஜயின் முதல் அரசியல் மாநாட்டிற்கு தன் கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ள திட்டமிட்டு வரும் நிலையில், விஜய் இப்படி அறிவுறுத்தியுள்ளது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் அவர் நன்றாக இப்படி தீர ஆலோசித்து மக்களின் நலனுக்காக இப்படி முடிவெடுத்திருக்கிறார் என்று தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Trending News