ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த விபத்து.. பாதியிலேயே நின்றுபோன அஜித் படம்

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் ஏகே 61 திரைப்படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். போனி கபூர் தயாரிக்கும் இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்படத்தை அஜித்தின் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர், இதைத் தொடர்ந்து அஜீத் அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நடிக்க இருக்கிறார். இன்னும் சில மாதங்களில் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் நந்தா பெரியசாமி, அஜித் பற்றிய ஒரு முக்கியமான தகவலை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார். அதாவது ஆரம்ப காலத்தில் ரவி ராஜா என்ற பெயருடன் அஜித் நடிப்பில் மகா என்ற ஒரு திரைப்படத்தை இவர் இயக்கினார். நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி அப்படத்தை தயாரித்தார்.

இவர் அஜித் நடித்த ராசி, வாலி, முகவரி, சிட்டிசன், வில்லன் போன்ற பல திரைப்படங்களை தயாரித்து இருக்கிறார். அந்த வகையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஒரு நல்ல நட்பு இருந்தது. அதனடிப்படையில் உருவாகிக் கொண்டிருந்த மகா திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்காக பல லட்சம் அளவில் செட் போடப்பட்டிருந்தது.

அந்த சண்டைக் காட்சியின் போது எதிர்பாராத விதமாக அஜித் தவறி விழுந்துள்ளார். இதனால் அவருக்கு முட்டியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சையில் இருந்த அவர் ஐந்து மாதங்களுக்குப் பிறகுதான் குணமடைந்தார்.

இதனால் படக்குழு 5 மாதங்களுக்குப் பிறகு படப்பிடிப்பு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இடையில் தயாரிப்பாளருக்கும், அஜித்துக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த படப்பிடிப்பு பாதியிலேயே நின்று போனது. இதனால் அதிர்ந்து போன அறிமுக இயக்குனர் ரவி ராஜா வேறு வாய்ப்புக்காக காத்திருந்தார்.

பின்னர் பல போராட்டங்களுக்குப் பிறகு தன் பெயரை நந்தா பெரியசாமி என்று மாற்றிக்கொண்டு கல்லூரியின் கதை என்ற திரைப்படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து அவர் மாத்தியோசி, ஆனந்தம் விளையாடும் வீடு போன்ற பல திரைப்படங்களை இயக்கினார். இருப்பினும் தான் இயக்கிய முதல் திரைப்படம் பாதியிலேயே நின்று போனதை தற்போது நந்தா பெரியசாமி மிகவும் வருத்தத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்