
மாஸ்டர் படத்திற்கு பிறகு தியேட்டர் உரிமையாளர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த கர்ணன் மற்றும் சுல்தான் திரைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் தியேட்டர்காரர்களுக்கு நல்ல வசூலை ஏற்படுத்தி கொடுத்தது. அதனைத் தொடர்ந்து சில மாதங்கள் சுமாரான படங்கள் வந்தாலும் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் ஒரு நல்ல ஓபனிங் கலெக்ஷனை கொடுத்தது.
அதனைத் தொடர்ந்து வெளியான தனுஷின் கர்ணன் திரைப்படத்திற்கு செம ஓபனிங் கிடைத்தது. ஆனால் தற்போது கொரானா பரவல் காரணமாக தியேட்டரில் பார்வையாளர்கள் பாதியாக அனுமதிக்கப்பட்டது வசூலில் பாதிப்பை ஏற்படுத்துமென தெரிகிறது.
ஆனால் இதையெல்லாம் தாண்டி சுல்தான் மற்றும் கர்ணன் ஆகிய இரண்டு படங்களிலும் நடித்த நடிகர் ஒருவர் இரண்டு படங்களிலும் தன்னுடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறார். அவர் வேறு யாரும் இல்லை. மலையாள நடிகர் லால் தான்.
தமிழில் சண்டக்கோழி படத்தில் வில்லனாக மிருகத்தனமாக நடித்த லால் மலையாள சினிமாவில் இயக்குனராகவும் எழுத்தாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபகாலமாக வில்லன் நடிப்பை ஓரம் கட்டிவிட்டு நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்தவகையில் சுல்தான் படத்தில் கார்த்தியை எடுத்து வளர்க்கும் வளர்ப்பு தந்தையாகவும், கர்ணன் படத்தில் தனுசுக்கு அனுபவம் வாய்ந்த நண்பராகவும் தன்னுடைய நடிப்பை சிறப்பாக கொடுத்துள்ளார் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
