சர்ச்சையை கிளப்பிய ஆண்டவரின் பாட்டு.. ஆரம்பிக்கும் முன்னரே அலப்பறை செய்த கமல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் தற்போது விக்ரம் திரைப்படத்தில் நடித்துள்ளார். பல வருடங்களுக்குப் பிறகு கமல் திரையில் தோன்ற உள்ளதால் அவரின் ரசிகர்கள் உட்பட பலருக்கும் இந்த படத்தின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பும், ஆர்வமும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று விக்ரம் திரைப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டது. அனிருத் இசையில் கமல் அந்த பாடலை அவரே எழுதி, பாடி இருந்தார். சென்னை பாஷையில் தர லோக்கலாக இருந்த அந்தப் பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகியுள்ளது.

பத்தல பத்தல என்று தொடங்கும் அந்தப் பாடலில் கமல்ஹாசன் பல இடங்களில் அரசியல் கட்சிகளை குத்திக் காட்டி எழுதி இருந்தார். கமல் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி தற்போது மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவராகவும் இருக்கிறார். அந்த வகையில் அவர் பல அரசியல் கட்சிகளுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை கூறி வந்தார்.

அதே போன்று தான் அவர் எழுதிய இந்தப் பாடலிலும் கஜானாவுல காசு இல்ல கல்லாலையும் காசு இல்ல, சாவி இப்போ திருடன் கையில போன்ற பல வார்த்தைகள் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. இதுகுறித்து தற்போது சென்னை மாநகர காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புகாரை சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கமல்ஹாசன் ஜாதி ரீதியான பிரச்சனைகளை தூண்டும் வகையிலும், பிரிவினைவாதத்தை தூண்டும் வகையிலும் பாடல்கள் எழுதி இருப்பதாக கூறியுள்ளார்.

மேலும் மத்திய அரசை தாக்கும் வகையில் சில வார்த்தைகள் இருப்பதாகவும், அவை அனைத்தையும் நீக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். காவல்துறை இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஜூன் மூன்றாம் தேதி படம் வெளிவருவதற்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் தற்போது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்களுக்கு பிரச்சனை ஏற்படுவது வழக்கமாக நடக்கும் ஒன்றுதான். இதேபோன்று அவரின் விஸ்வரூபம், விருமாண்டி போன்ற திரைப்படங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட்டது.

ஆனால் அதை எல்லாம் ஆண்டவர் சமாளித்து படத்தை வெளியிட்டார். அதேபோன்று இந்தப் பிரச்சினையையும் அவர் ஈசியாக சமாளித்து விடுவார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதன் மூலம் விக்ரம் படத்திற்கு இலவசமாக ஒரு பிரமோஷன் கிடைத்திருப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

பல வருடங்களுக்குப் பிறகு சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ஆண்டவருக்கு இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டுவிட்டதே என்றும், இதற்கு ஆண்டவர் சும்மாவே இருந்திருக்கலாம் என்றும் ஒரு சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Next Story

- Advertisement -