ஹிந்தியில் ரீமேக்காகும் விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் படம்.. இளமை காதலுக்கு பயணிக்கும் பாலிவுட்!

விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த 2018ல் வெளியான படம் ’96’. இப்படத்தை பிரேம் குமார் என்ற புதுமுக இயக்குனர் இயக்கியிருந்தார். காதலை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது.

இதில் ராம் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், ஜானு என்ற கதாபாத்திரத்தில் த்ரிஷாவும் நடித்திருந்தார்கள். சிறுவயது கதாபாத்திரத்தில் கவுரி, ஆதித்யா நடித்திருந்தனர். விஜய் சேதுபதி, த்ரிஷாவை விட இவர்கள் இருவரும் அழகாக நடித்திருந்தார்கள் என பேசப்பட்டது.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘காதலே காதலே’ பாடல் அனைவரையும் முணுமுணுக்க வைத்தது. தமிழில் சூப்பர் ஹிட்டான இப்படத்தை தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்தனர்.

தெலுங்கில் ஜானு என்ற பெயரில் இப்படத்தை பிரேம் குமாரே இயக்கியிருந்தார். இதில் ‘எங்கேயும் எப்போதும்’ சர்வானந்த் நாயகனாகவும், சமந்தா நாயகியாகவும் நடித்திருந்தார்கள். கன்னடத்தில் இப்படம் 99 என்ற பெயரில் ரீமேக் ஆனது. அதில் கணேஷ் நாயகனாகவும், பாவனா நாயகியாகவும் நடித்திருந்தார்கள்.

இந்நிலையில், 96 படம் அடுத்ததாக இந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், இப்படத்தின் இந்தி ரீமேக்கை அஜய் கபூர் தயாரிக்க உள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

96
96

மேலும், இப்படத்தின் இயக்குனர் மற்றும் இதில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தயாரிப்பாளர் அஜய் கபூர் தெரிவித்துள்ளார்.