இருட்டிலேயே படத்தை எடுத்து வெற்றி கண்ட 8 படங்கள்.. எல்லாத்திலேயும் அசத்திய லோகேஷ்

வணக்கம் சினிமா பேட்டை வாசகர்களே! நமது வலைத்தளத்தில் தொடர்ந்து பல சுவையான சினிமா செய்திகளை பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த கட்டுரையில் நாம் பார்க்க விருப்பது தமிழ்சினிமாவில் இருட்டை மையப்படுத்திய அல்லது இருட்டை அதிகமாக கொண்டு எடுக்கப்பட்ட படங்கள் வரிசையை.

சினிமா என்ற பொழுதுபோக்கு துறையில் வெளிச்சம் முக்கிய பங்கு வகிக்கும். இருட்டில் படம் பிடிப்பது என்பது சவாலான விஷயம். சமீபத்தில் இருட்டில் படம் எடுப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். அதற்கு புதிய தொழில்நுட்ப கேமரா மிகவும் உதவி செய்கிறது.

தளபதி: மணிரத்னம் அவர்கள் பெரும்பாலும் தனது திரைப்படங்களில் முடிந்த அளவு இருட்டை பிரதானமாகக் கொண்டு அல்லது இயற்கையான வெளிச்சத்தைக் கொண்டு படம் இயக்குபவர். அவர்மீது இருட்டிலேயே படம் எடுக்கிறார் என்ற விமர்சனம் எப்போதும் உண்டு. அந்தவகையில் அவர் இயக்கிய மௌனராகம், தளபதி, திருடா திருடா, அக்னி நட்சத்திரம் போன்ற திரைப்படங்களில் இருட்டு முக்கிய பங்கு வகித்திருக்கும். தளபதி திரைப்படத்தில் நிறைய இருட்டில் எடுக்கப்பட்ட காட்சிகளும் இருள் சூழ்ந்த வீடுகளும் அருமையாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் குழந்தை ரஜினி ஆற்றில் மிதந்து வரும் சீன், ராக்கம்மா கையத்தட்டு பாடல் ஒலிக்கும் சமயம் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மறுபடியும்: இயக்குனர் மற்றும் கேமராமேன் பாலுமகேந்திரா அவர்கள் திறம்பட ஒளிப்பதிவு செய்வதில் வல்லவர். இவர் இயக்கிய பல திரைப்படங்களில் இருட்டை பிரதானமாக பயன்படுத்தியிருப்பார். ஒரு சில திரைப்படங்களில் இருட்டை மையப்படுத்தியே காட்சிகளை அமைத்திருப்பார். அந்த வகையில் அவர் இருட்டை அதிகமாக பயன்படுத்தி இயக்கிய திரைப்படம் மறுபடியும். ரேவதி, அரவிந்த்சாமி, நிழல்கள் ரவி மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்தில் இரவு நேர பாடல் மற்றும் தியேட்டர் காட்சிகளில் இருள் படர்ந்து இருக்கும்.

வ குவாட்டர் கட்டிங்: மிர்ச்சி சிவா எஸ்பிபி சரண் மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படம் முற்றிலும் இருட்டில் எடுக்கப்பட்டிருக்கும். வெளிநாட்டு வேலைக்கு செல்வதற்கு முன்னர் இறுதியாக ஒருமுறை குடித்து விட்டு செல்ல வேண்டும் என்பதற்காக குவாட்டர் தேடி அலையும் கதை. இந்த படத்தில் இருட்டு பிரதான கதாபாத்திரமாக வருகிறது. டார்க் ஹ்யூமர் வகையில் எடுக்கப்பட்ட இந்த திரைபடத்தை புஷ்கர் காயத்ரி தம்பதியினர் இயக்கியிருந்தார்கள்.

ஒரு நாள் இரவில்: சத்யராஜ் யூகிசேது கல்யாணி நடராஜன் உட்பட பலர் நடித்திருந்த திரைப்படம் ஒரு நாள் இரவில். இந்த படம் மலையாள படமான ஷட்டர் படத்தின் ரீமேக் ஆகும். கதைப்படி பெண் இச்சைக்கு ஆளாகிப் ஒரு கடைக்குள் மாட்டிக்கொள்ளும் சத்யராஜ் மற்றும் விலைமாது ஒருவர் பற்றிய கதையாகும். மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படத்தின் தமிழ் பதிப்பு அவ்வளவாக மக்களை கவர வில்லை என்பதே கசப்பான உண்மை. ஆண்டனி என்பவர் இந்த திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

யுத்தம் செய்/ ஓநாயும் ஆட்டுக்குட்டியும்: இயக்குனர் மிஷ்கின் அவர்கள் பெரும்பாலும் தனது திரைப்படங்களை இருட்டில் படம் படிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இருட்டை தனது கேமரா மூலம் அழகாக காண்பிப்பதில் வல்லவர் அவர். அவர் இயக்கிய யுத்தம் செய் மற்றும் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஆகிய திரைப்படங்களில் இருள் பிரதான கதாபாத்திரம். இரண்டு படங்களுமே 90% இருட்டில் படமாக்கப்பட்டிருக்கும். இரண்டு படங்களுமே வெற்றியை பதிவு செய்தன.

பீட்சா: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய முதல் வெள்ளி திரை திரைப்படம் பீட்சா. இந்த படத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், நரேன் உட்பட பலர் நடித்திருந்தனர். திகில் படமான இந்தப் படத்திற்கு சிறப்பாக திரைக்கதை அமைத்திருந்தார். மாபெரும் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் இந்த காலத்திலும் 75 நாட்களுக்கு மேல் திரையரங்கில் ஓடியது அதிசயம். சிறிய பட்ஜெட்டில் பெரிய வெற்றியை பதிவு செய்தது இந்த திரைப்படம் என்றால் அது மிகையல்ல.

மாநகரம்/ கைதி/ விக்ரம்: சமீபத்திய இளைஞர்களின் ஒரே நாடி துடிப்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜ். லோகேஷ் பெரும்பாலும் தனது திரைப்படத்தை இருட்டில் மெனக்கெட்டு எடுக்கிறார். மேலும் அவர் அமைக்கும் திரைக்கதை இருளுக்கு ஏற்றதாக இருக்கிறது. அவர் அமைக்கும் சண்டைக்காட்சிகளும் இருட்டில் இன்னும் ஈர்ப்பாக இருப்பதாக பலர் கூறுகின்றனர். அந்தவகையில் அவர் இயக்கிய கைதி மற்றும் சமீபத்திய சென்சேஷன் விக்ரம் ஆகிய படங்களில் இருள் பிரதானமாக வருகிறது.