நடித்துக் கொண்டிருக்கும் போதே காணாமல் போன 5 நடிகைகள்.. எல்லாம் விக்ரம் பிரபு ராசிதான்

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த முன்னணி நடிகைகள் நடித்துக் கொண்டிருக்கும் போதே காணாமல் போன கதைகள் எல்லாம் உண்டு. அந்த வகையில் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்களின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனான நடிகர் விக்ரம் பிரபுவுடன் நடித்த பிறகு, வந்த ராசியோ என்னமோ தெரியவில்லை ஒரு சில நடிகைகள் சினிமாவிற்கு வந்த தடையம் இல்லாமல் மறைந்து விட்டனர்.

லட்சுமி மேனன்: 2012 ஆம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான கும்கி படத்தில் தான் நடிகை லட்சுமி மேனனும் அறிமுகமானார். ஆனால் இவரின் அடுத்த படமான சுந்தரபாண்டியன் படம் முதலில் வெளியானது. கும்கி படத்தில் மலை கிராமத்தில் பெண்ணாகவே அல்லி கதாபாத்திரத்தில் லஷ்மி மேனன் கச்சிதமாக பொருந்தி நடித்திருப்பார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உருவானது.

பிறகு குட்டிப்புலி, மஞ்சப்பை, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகர்தண்டா, கொம்பன், ரெக்க போன்ற படங்களில் வரிசையாக நடித்துக்கொண்டிருந்த லட்சுமி மேனன் பிறகு ஐந்து வருடங்களாக எந்த படங்களிலும் நடிக்காமல் சினிமாவை விட்டு விலகியிருந்தார். அதன் பிறகு மீண்டும் விக்ரம் பிரபுவுடன் கடந்த ஆண்டு எம் முத்தையா இயக்கிய புலிக்குத்தி பாண்டி என்ற படத்தில் பேச்சி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திற்குப் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடிக்காமல் லட்சுமி மேனன் சினிமாவில் இருந்தே காணாமல் போய்விட்டார்.

ஸ்ரீதிவ்யா: 3 வயதில் தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக தொலைக்காட்சித் தொடர்களில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை துவங்கிய ஸ்ரீதிவ்யா, சிவகார்த்திகேயனுடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகியாக தமிழுக்கு அறிமுகமானார். இந்த படம் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றதால், அதன்பிறகு ஸ்ரீவித்யா வரிசையாக ஈட்டி, ஜீவா, காக்கி சட்டை படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தார்.

அதன்பிறகு 2014 ஆம் ஆண்டு விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வெள்ளைக்கார துரை படத்தில் நடித்ததற்கு பிறகு தன்னுடைய மார்க்கெட்டை சுத்தமாக இழந்த ஸ்ரீதிவ்யா, 2016ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஜோடியாக பென்சில் என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் அவருக்கு தோல்விப் படமாகவே அமைந்தது. அதன் பிறகு எந்தப் படத்திலும் ஸ்ரீதிவ்யாவை பார்க்க முடியவில்லை.

ஷாமிலி: மணிரத்னம் இயக்கத்தில் 1990 ஆம் ஆண்டு வெளியான அஞ்சலி திரைப்படத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட குழந்தை அஞ்சலி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பேபி ஷாமிலி, அதன் பிறகு கதாநாயகியாக தமிழில் விக்ரம் பிரபுவுடன் 2016 ஆம் ஆண்டு வெளியான வீர சிவாஜி என்ற படத்தில் என்ட்ரி கொடுத்தார்.

இந்தப் படத்திற்கு முன்பு ஏற்கனவே நிறைய மலையாள, கன்னட, தெலுங்கு படங்களில் நடித்த ஷாமிலி தமிழில் மட்டும் விக்ரம் பிரபுவுடன் வீர சிவாஜி படத்தில் நடித்த ராசியால் அந்தப் படத்திற்குப் பிறகு மற்ற தமிழ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பை பெறவே முடியாத நிலை ஏற்பட்டது.

மகிமா நம்பியார்: பிரபு சாலமன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான சாட்டை படத்தில் அறிவழகி என்ற 12ம் வகுப்பு படிக்கும் மாணவியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மலையாள நடிகை மகிமா நம்பியார். இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து நான்கு படங்களில் நடித்து, பின் 2020 ஆம் ஆண்டு விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அசுரகுரு படத்திற்குப் பிறகு சுத்தமாகவே தன்னுடைய மார்க்கெட்டை இழந்து பட வாய்ப்பு இல்லாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.

பிரியா ஆனந்த்: வாமனன் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழுக்கு அறிமுகமான நடிகை பிரியா ஆனந்த், அதன் பிறகு பாலிவுட் திரைப்படமான இங்கிலீஷ் விங்கிலீஷ் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து இந்திய அளவில் பிரபலமானார். இதனால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் இதுவரை பனிரெண்டு படங்களை நடித்திருக்கும் பிரியா ஆனந்த், எதிர்நீச்சல் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து பிறகு வணக்கம் சென்னை, வை ராஜா வை போன்ற பட வாய்ப்புகளை வரிசையாக பெற்று கடைசியாக விக்ரம் பிரபுவுடன் கடந்த 2014 ஆம் ஆண்டு அரிமா நம்பி படத்தில் நடித்த பிறகு அவருடைய ஜோலி முடிந்து போய்விட்டது.

இவ்வாறு முன்னணி நடிகையாக வலம் வந்த இந்த ஐந்து நடிகைகளும் எதிர்பாராதவிதமாக விக்ரம் பிரபுவுடன் ஜோடி சேர்ந்து அவருடன் நடித்த ராசியால் சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டனர். இருப்பினும் இதற்கு முக்கியமான காரணம் வேறு எதுவாக இருந்தாலும் அதை எல்லாம் மறந்துவிட்டு ரசிகர்கள் விக்ரம் பிரபுவை தான் இந்த ஐந்து நடிகைகளும் சினிமாவில் எட்டிப் பார்க்காமல் இருப்பதற்கு காரணம் என விமர்சிக்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்