பாஜக ராஜ்யசபா எம்.பி இல. கணேசன் தமிழகத்தை விட்டு வெளியேறலாம் என்று இளைஞர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். நாடு நலம் பெற ஒரு மாநிலத்தை இழப்பதில் தவறில்லை என்று பாஜக எம்.பி இல.கணேசன் கூறியதற்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில் பாஜகவைச் சேர்ந்த இல. கணேசன், பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா, மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த திட்டத்திற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வருவது தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு நலம் பெற தனி மனிதர்களும், அவர்கள் வாழும் மாநிலமும் தேவையான தியாகத்தை செய்துதான் ஆக வேண்டும் என பாஜக எம்.பி.இல. கணேசன் நேற்று கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இளைஞர்கள் ராஜ்யசபா பதவியை இல.கணேசன் தியாகம் செய்ய வேண்டும் என்றும் டுவிட்டரில் பலர் பதிவிட்டு வருகின்றனர்.