தூத்துக்குடி மட்டக்கடை பஜார் காளியப்ப பிள்ளை தெருவை சேர்ந்தவர் பில்லாஜெகன்,45. இவர் தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவராகவும், மேலும் தி.மு,க.,வில் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

இவரது மகள் ஏஞ்சல் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.ஏ., இரண்டாமாண்டு படித்து வருகிறார். பில்லா ஜெகன் மகளை அதே தெருவை சேர்ந்த சகாயராஜ் மகன் சச்சின் ,26, என்பவர் ஒரு தலையாக காதலித்து வந்தாராம்.

நேற்று முன்தினம் மாலை ஏஞ்சல் பீச் ரோட்டிலுள்ள மதுரா கோட்ஸ் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த போது அங்கு வந்த சச்சின் என்னை காதலிக்காவிட்டால் உன் முகத்தில் ஆசிட் ஊற்றி அழகை கெடுத்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இது குறித்து வடபாகம் காவல்நிலையத்தில் புகார் செய்ததின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து சச்சினை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் 2ம் கேட் பகுதியில் நின்று கொண்டிருந்த சச்சினை பில்லாஜெகன் மற்றும் அவரது சகோதரர்கள் ,அவரது ஆதரவாளர்கள்  சச்சினை காரில் கடத்தி சென்று தனசேகரன் நகர் பகுதியில் உள்ள பில்லாஜெகன் அலுவலகத்திற்கு கொண்டு சென்று அங்கு வைத்து அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியதில் சச்சின் உயிரிழந்தார்.

பின்னர் அவரை காரில் தூக்கி கொண்டு ஜோதிநகர் காட்டுப்பகுதியில் வீசி விட்டு சென்று விட்டனர். இந்நிலையில் சச்சினை கடத்தியது தொடர்பான தகவலின் பேரில் தூத்துக்குடி சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஹரன் தலைமையில் போலீசார் ஜோதி நகருக்கு சென்றனர்.

அங்கு சென்று பார்க்கையில் சச்சின் இறந்துவிட்டது தெரியவந்தது. தொடர்ந்து அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவத்தில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடத்தி கொலை செய்யப் பட்ட சச்சின் பிரபல ரவுடியாவார்.இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.