40 ஆண்டு காலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட வாய்ப்பு கிடைக்க பலரும் தவம் இருக்கின்றனர். அவர் தற்போது இளம் இயக்குனர்களுக்கு அதிக வாய்ப்பு கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் கார்த்திக் சுப்புராஜ் பேட்ட என்ற வெற்றிப்படத்தை அவருக்கு கொடுத்தார். அதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த படத்தை பெரிதும் நம்பிக்கை கொண்டிருக்கிறார் ரஜினி.
இந்த படத்திற்கு பிறகு மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் அல்லது கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி என்பவருக்கு சூப்பர் ஸ்டார் வாய்ப்பு கொடுக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது ரஜினி வட்டாரம்.
அதேபோல் ரஜினிக்காக கதை எழுதி வைத்து 6 வருடமாக காத்துக் கொண்டிருப்பதாக மலையாளத்தில் பிரேமம் என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அல்போன்ஸ் புத்தரன் என்பவர் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துகாக சூப்பர் கதை ஒன்றை எழுதி வைத்துள்ளதாகவும், ஆனால் அவரைச் சந்தித்து அந்தக் கதையைக் கூறும் வாய்ப்பு தற்போது வரை தனக்கு கிடைக்கவில்லை எனவும் புலம்பி உள்ளார்.
நிவின் பாலி மற்றும் அல்போன்ஸ் புத்திரன் கூட்டணியில் உருவாகி மொழியை கடந்தும் மிகப்பெரிய வெற்றியைக் குவித்த படமாக மாறியது பிரேமம். தமிழில் டப்பிங் செய்யப்படாமலேயே அந்த படத்தை தமிழ்நாட்டில் பலரும் தியேட்டரில் கண்டு களித்தனர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.
