ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசுடன் இணைந்து உடனடியாக எடுப்பேன் என்றும், இது பற்றி மாநில அரசின் நடவடிக்கைகளை நீங்கள் கூடிய விரைவில் காண்பீர்கள் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

ஜல்லிக்கட்டு தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்த பிரதமர் மோடியை, முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சந்தித்து பேசினார். அப்போது, ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உடனடியாக எதுவும் செய்ய முடியாது” என்று பிரதமர் கூறினார். இந்த சந்திப்புக்கு பின்னர் டெல்லியில் செய்தியாளர்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார்.

அப்போது, தமிழகத்தில் மழையின் அளவு மிக குறைந்த அளவே நமக்கு கிடைத்தது. அதன் காரணமாக தமிழகத்தின் ஒரு கடுமையான வறட்சி ஏற்பட்டிருக்கிறது என்பதினை பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட வறட்சி நிலை இருக்கிறது என்பதினையும், வறட்சி நிவாரண நிதியாக அனைத்து நிலைகளிலும் 39,565 கோடி என்ற அளவுக்கு கோரிக்கை மனு ஒன்று தயார் செய்யப்பட்டு பிரதமருக்கு மூன்று தினங்களுக்கு முன்பாக வருவாய்துறையின் சிஆர்ஏ டெல்லி சென்று பிரமதர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் பிரதமரை இன்று சந்தித்தேன்.

தமிழகத்தில் தடை செய்யப்பட்டிருக்கின்ற ஜல்லிக்கட்டை, தமிழகத்தின் பாரம்பர்யமான உரிமையை, வீர விளையாட்டை மீண்டும் நடத்துவதற்குரிய சட்டத்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஜல்லிக்கட்டு நடத்திட தேவையான நடவடிக்கையை எடுத்திட வேண்டும் என்றும், அதற்கு ஏற்றார் போல் ஒரு அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற ஒரு கருத்தையும் வலியுறுத்தி பிரதமரிடம் தெரிவித்தேன். அவரும் எனது கருத்துகளை கேட்டுக் கொண்டார்.

இந்த பிரச்னையில் தமிழ்நாட்டின் உணர்வுகளுக்கு மிகுந்த மதிப்பு அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். தமிழர்களுடைய உணர்வுகளை நான் முழுமையாக மதிக்கின்றேன். நான் நன்றாகவே அறிந்திருக்கிறேன் என்ற கருத்தையும் தெரிவித்தார். மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்னும் தீர்ப்பு வழங்கவில்லை. எனவே மாநில அரசு இது தொடர்பாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் தெரிவித்தார். ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசுடன் இணைந்து உடனடியாக எடுப்பேன் என தெரிவித்துக் கொள்கிறேன். இது பற்றி மாநில அரசின் நடவடிக்கைகளை நீங்கள் கூடிய விரைவில் காண்பீர்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘நன்மையே யாவும் நன்மையாய் முடியும்’ என்பதை மட்டும் இப்போது தெரிவித்துவிட்டு, மேலும் தமிழ்நாட்டின் வறட்சி நிலையை பிரதமரிடம் எடுத்துக் கூறினேன். பிரதமரும் மாநில அரசின் வறட்சிக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்” என்றார்.

இதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பது உங்களுக்கு தெரியும். மத்திய அரசு அதையே சாக்காக வைத்துக் கொண்டு தமிழர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு நடந்து கொள்வதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த முதல்வர், ‘பொறுமையாக இருங்கள், நல்லதே நடக்கும்’ என்றார்.

போராட்டக்கார்கள் மீது தடியடி நடத்தப்படுகிறது. ஜல்லிக்கட்டு நிச்சயம் நடைபெறும் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள். ஆனால் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி வருகின்றனர். காவல்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர், ‘எங்கும் தடியடி நடக்கவில்லை’ என்றார்.