YG Mahendran Plays Three Ex Chief Minister-2

நாடகத்திலும், சினிமாவிலும் புகழ் பெற்று விளங்கிய ஒய்.ஜி.மகேந்திரன், மூன்று முதல்-அமைச்சர்களுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.

தந்தை ஒய்.ஜி.பார்த்தசாரதி, தாயார் திருமதி ஒய்.ஜி.பி. ஆகியோர் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்ததால், பல தலைவர்களுடனும், பிரமுகர்களுடனும் சிறு வயதிலேயே அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது.

இதுபற்றி மகேந்திரன் கூறியதாவது:-

“என் தந்தை எங்கள் இல்லத்தையே ஒரு கலைக்கூடமாக வைத்திருந்தார்கள். இசை மேதைகள் எம்.எஸ்.சுப்புலட்சுமி, படேகுலாம் அலிகான், சமீபத்தில் காலமான ஷெனாய் மேதை மிஸ்மில்லாகான் போன்றோர் எல்லாம் அங்கு வருகை தந்திருக்கிறார்கள்.

என்னுடைய முதல் பிறந்த நாள் விழாவில் எம்.எஸ்.சுப்புலட்சுமியும், மாபெரும் நடனக் கலைஞர் பாலசரஸ்வதியும் இசை விருந்து அளித்துள்ளனர்.

என் தந்தையுடன் எம்.ஜி.ஆர். மிகவும் நெருக்கமானவர். “நாடோடி மன்னன்” படமாகிக்கொண்டிருந்த காலத்தில், எங்கள் வீட்டுக்கு வந்து, தனக்குப் பிடித்தமான `அயிட்டங்களை’ சமைக்கச் சொல்லி சாப்பிட்டு விட்டுப் போவார்.

நான் சிறுவனாக இருந்தபோது, ஒருமுறை எம்.ஜி.ஆர். என்னை ராயப்பேட்டையில் உள்ள தன் வீட்டுக்கு (தற்போது அ.தி.மு.க. தலைமை நìலையம்) அழைத்துச் சென்றார். அங்கு ஒரு அறையை எனக்குக் காட்டினார். சினிமாவுக்குப் பயன்படுத்தப்படும் 40, 50 கத்திகள் அங்கு இருந்தன.

ஒரு கத்தியை எடுத்து என்னிடம் கொடுத்தார். ஒரு கத்தியை அவர் எடுத்துக்கொண்டு, சினிமாவில் கத்திச்சண்டை போடுவது எப்படி என்பதை கற்றுக் கொடுத்தார். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

எம்.ஜி.ஆர். பாட்டை வைத்து “ஜோக்” “கலங்கரை விளக்கம்” படத்தில், “காற்று வாங்கப்போனேன், ஒரு கவிதை வாங்கி வந்தேன்” என்று எம்.ஜி.ஆர். பாடுவது போல் ஒரு பாட்டு வரும். என்னுடைய “நலந்தானா” நாடகத்தில் இதுபற்றி காமெடி வசனம் பேசுவேன்.

“நம்ம தமிழ் ஹீரோகிட்டே இதுதான் பிரச்சினை. ஒன்னை வாங்கிக்கிட்டு வரச்சொன்னா, வேறு எதையோ வாங்கிக்கிட்டு வருவாரு” என்று ஜோக்கடிப்பேன். இது ரொம்ப பாப்புலர்.

ஒரு நாள், எம்.ஜி.ஆர். அந்த நாடகத்தைப் பார்க்க வந்தார். குறிப்பிட்ட இந்த ஜோக்கை அன்று கூறலாமா அல்லது விட்டு விடலாமா என்று எனக்கும், ஏ.ஆர்.எஸ்.சுக்கும் வாக்குவாதம்.

“இந்த ஜோக் வேண்டாம். எம்.ஜி.ஆர். கோபப்படுவார்” என்று ஏ.ஆர்.எஸ். சொன்னார்.

“அந்த ஜோக் அவசியம் வேண்டும்” என்று சொல்லிவிட்டு, வழக்கம்போல் நாடகத்தில் பேசினேன். முன் வரிசையில் அமர்ந்திருந்த எம்.ஜி.ஆர். விழுந்து விழுந்து சிரித்தார். மேடையில் பேசும்போதும், அதைப் பாராட்டினார். `இந்த ஜோக்கை பேசலாமா, வேண்டாமா என்று கூட உங்களிடையே விவாதம் நடந்திருக்கலாம். மகேந்திரன் தைரியமாகப் பேசியதை பாராட்டுகிறேன். அது நல்ல நகைச்சுவை வசனம்” என்று கூறினார்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் தாயார் சந்தியாவும், சித்தி வித்யாவும் என் தந்தையின் நாடகக் குழுவில் நடித்திருக் கிறார்கள்.

ஜெயலலிதா என்னைவிட 2 வயது மூத்தவர். எங்கள் குடும்பத்தில் ஒருவராகப் பழகியவர். ஒருபுறம் நாடக ஒத்திகை நடந்து கொண்டிருக்கும்போது, நாங்கள் இன்னொரு புறம் விளையாடிக் கொண்டு இருப்போம். அன்பான மூத்த சகோதரி அவர்.

எனக்கு உடன் பிறந்தவர் ராஜேந்திரா என்ற ஒரு சகோதரன் மட்டுமே. சகோதரி இல்லாத குறையைத் தீர்த்தவர் ஜெயலலிதா. படிப்பறிவும், அறிவாற்றலும் மிக்கவர். மெட்ரிகுலேஷன் பரீட்சையில் மாநிலத்தில் இரண்டாவது மாணவியாக பாஸ் செய்தார். அவருடைய `நோட்ஸ்’களை வாங்கிப் படித்ததால், நானும் மாநிலத்தில் 4-வது மாணவனாகத் தேறினேன்.

சகோதரி ஜெயலலிதா பிரபல நட்சத்திரமான பிறகு அவர் படங்களை நாங்கள் பார்த்துவிட்டு, எங்கள் கருத்துக்களைச் சொல்வோம்.

YG Mahendran Plays Three Ex Chief Minister-1

ஒருமுறை பேச்சுவாக்கில், அவருடைய முதல் படமான “வெண்ணிற ஆடை”யை நான் இன்னும் பார்க்கவில்லை என்று கூறிவிட்டேன். அப்போது, வெண்ணிற ஆடை 3-வது முறையாக ரிலீஸ் ஆகி `லிபர்டி’ தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது.

எனக்கு அங்கு ஒரு டிக்கெட் ரிசர்வ் செய்து, அப்படத்தைப் பார்க்கச் செய்து, பிறகு படத்தைப்பற்றி என் கருத்தைக் கேட்டறிந்தார்.

இன்றைய முதல்-அமைச்சர் கலைஞரோடு எனக்கு நெருக்கம் அவ்வளவாக இருந்தது இல்லை. எனினும், “பராசக்தி”, “திரும்பிப்பார்” வசனங்களை பலமுறை கேட்டு ரசித்தவன்.

1989-ல், மூப்பனார் மீதிருந்த அபிமானத்தின் காரணமாக, அவர் வேண்டுகோளுக்கு இணங்கி, முதன் முதலாக அரசியலில் இறங்கி, காங்கிரசுக்கு பிரசாரம் செய்தேன். அந்தத் தேர்தலில் கலைஞர் வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.

ஊட்டியில் அரசு நடத்தும் மலர்க் கண்காட்சியில், நான் தவறாமல் நாடகம் நடத்துவது வழக்கம். குறிப்பிட்ட தேதியில், அரங்கத்தை புதுப்பிக்கும் வேலை நடைபெறுவதால், நாடகம் ரத்து செய்யப்படுவதாக எனக்குத் தெரிவித்தார்கள்.

நான் அரங்குக்கு சென்று பார்த்தபோது, அங்கு அரங்கத்தை புதுப்பிக்கும் வேலை எதுவும் நடைபெறவில்லை. நாடகத்திற்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திருமëபிச்சென்றனர்.

நான் ஏமாற்றப்பட்டிருப்பதை உணர்ந்து, கலைஞருக்கு காரசாரமாக ஒரு கடிதம் எழுதினேன். “காங்கிரசுக்கு தேர்தல் பிரசாரம் செய்த ஒரே காரணத்துக்காக எங்கள் நாடகத்தை ரத்து செய்தது அநியாயம். கலைஞர் முதல்வராக இருக்கும்போது, என் போன்ற கலைஞர்களுக்கு அநீதி நடக்கலாமா?” என்று அதில் குறிப்பிட்டிருந்தேன்.

பிறகு அப்படி ஒரு கடிதம் எழுதியதையே மறந்து விட்டேன்.

ஒரு மாதம் கழித்து, கலைஞரிடம் இருந்து பதில் வந்தது. “தங்களின் கடிதம் கிடைக்கப்பெற்றேன். உதகமண்டலம் கோடை விழாவில் தங்களின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து, சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் மூலமாக விளக்கம் கேட்க கூறியுள்ளேன். இதுபோன்ற அரசு விழாக்களில் பலபேரை திருப்தி செய்ய வேண்டிய நெருக்கடி ஒரு சில அரசு அதிகாரிகளுக்கு ஏற்படுவதால், கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாமல் தவறு நேர்ந்திருக்கலாம். எனினும், இதனை பெரிதாக மனதில் கொள்ள வேண்டாம். இனி இதுபோல் நடக்காது” என்று கையெழுத்திட்டு கடிதம் அனுப்பியிருந்தார், கலைஞர். அதுமட்டுமின்றி, மற்ற அரசு விழாக்களில் நான் நாடகம் நடத்தவும் அனுமதி அளித்தார்.

என்னை ஒரு பொருட்டாக எண்ணி கலைஞர் தன் கைப்பட கடிதம் எழுதியது கண்டு நெகிழ்ந்தேன். அவர் எழுதிய கடிதத்தை இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறேன்.

குறைகளை உடனுக்குடன் கவனிப்பதால்தான், சகல தரப்பு மக்களையும் அவர் தன் பக்கம் வைத்திருக்க முடிகிறது என்பது என் கருத்து.”

இவ்வாறு மகேந்திரன் கூறினார்.