fbpx
Connect with us

Cinemapettai

ஆமா, நாங்க சென்டிமென்டல் இடியட்ஸ்தான். ஆனால் கோழைகள் அல்ல – கோபிநாத் (வீடியோ)

Videos | வீடியோக்கள்

ஆமா, நாங்க சென்டிமென்டல் இடியட்ஸ்தான். ஆனால் கோழைகள் அல்ல – கோபிநாத் (வீடியோ)

ஜல்லிக்கட்டுக்காகத் தமிழக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ‘நீயா நானா’ கோபிநாத்தும் இரவில் மெரீனாவிற்கு சென்று போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்.

”ஜல்லிக்கட்டுக்காக போராடும் இளைஞர்கள் பற்றிய உங்கள் கருத்து?”

”போராட்டகளத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு முதலில் என்னுடைய வணக்கங்களும், வாழ்த்துக்களும். இளைஞர்கள் ஒன்று சேர்ந்து முன்னின்று ஒரு விஷயத்தைச் செய்யும் போது எவ்வளவு கட்டுப்பாட்டுடனும் கண்ணியத்துடனும், நேர்த்தியாகவும் செயல்படமுடியும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. இந்த களப்போராட்டத்தின் மூலம் தமிழகம் இந்தியாவிற்கே ஒரு முன்னுதாரணத்தை உருவாக்கியிருக்கிறது. உணர்வுகள் சார்ந்த நியாயங்கள், உரிமை சார்ந்த புரிதல் இவை இரண்டுமே இங்கிருக்கும் இளைஞர்களுக்கு புரிந்திருக்கிறது. அவர்கள் கொடுத்திருக்கிற அழுத்தம் ஒட்டு மொத்த இந்தியாவையே, உலக நாடுகளையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. இது இளைஞர்களின் காலம். நான் மெரீனாவுக்குப் போகும் போது இரவு 1 மணி இருக்கும். அங்கிருந்தவர்கள் அவ்வளவு அமைதியாக, கட்டுக்கோட்பாக தங்களுடைய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மெரினாவில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் இப்படியான ஒரு ஒழுக்க நெறியை இளைஞர்களிடம் பார்க்க முடிகிறது. இளைஞர் படை ஒன்று திரளும்போது என்ன நடக்கும் என்பதை எடுத்துக்காட்டியிருக்காங்க. பொதுவாக எந்தப் போராட்டமாக இருந்தாலும் ஒரு இரவு, ஒரு பகல் என்பதோடு முடிந்துவிடும். ஆனால், கடந்த நான்கு நாட்களுக்கு மேலாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது.அங்கே சாப்பிட்ட பேப்பர்களை அவங்களே அப்புறப்படுத்துறாங்க. அந்த வழியாகச் செல்லக்கூடிய பேருந்துகளுக்கு அவங்களே வழி ஒதுக்கித்தராங்க. இவ்வளவு நேர்த்தியான, அமைதியானப் போராட்டம் எங்குமே நடந்திருக்க முடியாது. இந்த அமைதியைக் கலைக்கவும் குலைக்கவும் என்னவெல்லாம் நடக்கும் என்பதையும் புரிஞ்சு வச்சிருக்காங்க. இளைஞர்களுக்குப் பின்னால் உலகம் பயணிக்க துவங்கிவிட்டதை இந்த போராட்டம் உணர்த்துகிறது.”

”தமிழர்களை சிலர் சென்டிமென்டல் இடியட்ஸ் என்று சொல்கிறார்களே?”

”ஆமா, நாங்க சென்டிமென்டல் இடியட்ஸ்தான். ஆனால் கோழைகள் அல்ல. வணிக அரசியலை புரிந்துகொள்ளாதவர்கள் அல்ல. நாங்கள் அன்பானவர்கள். அதற்கு நீங்கள் என்ன பேர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அன்புதான் எங்கள் ஆயுதமே. ஆறு மாசப்பிள்ளைய தூக்கிட்டு வந்து உரிமைக் கேட்டு உட்கார்ந்திருக்காங்க. இவங்க எல்லாம் கூட்டத்தை வேடிக்கைப் பார்க்கவா வர்றாங்க? உரிமைக்காக வர்றாங்க. அடையாளத்தை பற்றிக் கொள்கிற சமூகம் தான் அங்கீகாரத்தை நிலைநிறுத்தும். அப்படிப்பட்டவர்கள் எமோஷ்னல் இடியட்ஸ்னா.. ஆமா, நாங்க அப்படித்தான். ஆனா, எங்க இளைஞர்கள்தான் உலகம் முழுவதும் ஆள்கிறார்கள். உலகம் முழுக்கத் தொழில்நுட்பத்தை உள்ளங்கையில் வைத்திருக்கிறார்கள்”

இன்றைய இளைஞர்கள் எதை எல்லாம் உடைச்சிருக்காங்க?

”இளைஞன் பொறுப்பற்றவன், ஒன்னு சேர மாட்டாங்க, செலிபிரிட்டி பின்னாடி செல்பவன் என்கிற எல்லா பிம்பத்தையும் உடைச்சுட்டான் தமிழ் இளைஞன். ஏறு தழுவுதல் என்பது ஒரு விளையாட்டல்ல, அது கலாசாரத்தின் அடையாளம். பால்வள நாடுகளின் அரசியல் இதற்குள் இருக்கிறது. இதைப் பற்றி போன வருடமே ‘நீயா நானா’வில் சொன்னோம். இது வெறும் விளையாட்டல்ல என்பதை உணர்த்தும் விதமான பல்வேறு கருத்துக்கள், அந்த நீயா, நானாவில் வெளிப்பட்டது. இது எமோஷனலாக கூடிய கூட்டம் என்கிற முத்திரை குத்த முயல்வதும்கூட அரசியல் தான். புரிஞ்சுக்கிட்டு வந்த கூட்டம் இது. மனிதனுக்கு நேரம் என்பது ரொம்ப முக்கியம்ங்க. இன்னிக்கு வந்து உட்கார்ந்திருக்கிற அத்தனை பேரும் தனக்கான நேரத்தை விட்டுட்டு வந்து களத்தில் நின்னு போராட்டிட்டு இருக்காங்க. அத்தனை பெண்கள் கூடியிருக்கிற கூட்டத்தில் அவ்வளவு பாதுகாப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அடையாளத்தின் வாயிலாகத்தான் ஒரு சமூகம் எழுந்து நிற்கிறது என்பதை புரிந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜனநாயகத்தின் அடிப்படைப் பண்பு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது தான். அது நடந்தே தீரவேண்டும்’’ என்று கூறிய கோபிநாத், போராட்ட களத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top