Tamil Cinema News | சினிமா செய்திகள்
விரைவில் உருவாக இருக்கும் என்னை அறிந்தால் 2
கௌதம் மேனன், அஜித் கூட்டணியில் வெற்றி பெற்ற என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக புதிய தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் றெக்கை கட்டி வருகிறது.
தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படம். இப்படத்தை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். த்ரிஷா நாயகியாக நடித்தார். வில்லனாக நடித்த அருண் விஜயிற்கு 14 வருடங்களுக்கு பிறகு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு இப்படம் தான். அஜித்துக்கான ஹீரோயிஸ பில்டப்களைக் கதையோட்டத்திலேயே வைத்திருந்தார்.
பல படத்தில் சொல்லப்பட்ட கதை தான் என்றாலும் கௌதம் மேனன் அவருக்கு உரித்தான பாணியில் படத்தை வெளியிட்டு இருந்தார். படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான வேலைகள் நடைபெற்று வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது.
தற்போது, அஜித் விஸ்வாசம் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் தான் தொடங்கப்பட்டு இருக்கிறது. சிவா நான்காவது முறையாக அஜித்தின் படத்தை இயக்கி வருகிறார். இப்படம் முடிந்ததும் என்னை அறிந்தால் 2ல் அஜித் நடிக்கலாம் எனத் தெரிகிறது. இப்படத்தின் ஒன்லைனை அஜித்திடம் சொன்ன போது, கேட்டு அசந்து போனதால், திரைக்கதையை தொடங்குமாறு அனுமதி அளித்ததாக கூறப்படுகிறது. மேலும், முதல் பாகத்தில் மகளாக நடித்த அனிகா வளர்ந்து விட்டதால், அவரும் இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பார் எனப் பேச்சுக்கள் அடிப்படுகிறது.
கௌதம் வாசுதேவ் மேனன் தனது வெற்றிப்படங்களின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு இருக்கிறார். காதலர்களின் பேவரிட் படமான விண்ணை தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் ஒன்றாக என்ற பெயரில் உருவாக இருப்பதாக கௌதம் மேனன் ஏற்கனவே அறிவித்து விட்டார். என்னை அறிந்தால் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கௌதம் மேனன் தற்போது தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா மற்றும் விக்ரமின் துருவ நட்சத்திரம் பட வேலைகளில் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
