இதயத் தாக்குதல் ஏற்பட்டதும் இறந்து போகக் கூடிய சாத்தியக்கூறு ஆண்களை விட, பெண்களுக்கு இரு மடங்கு அதிகமாக உள்ளது.

பத்தில் ஒரு பெண்ணுக்குத் தான் மார்பக புற்று ஏற்பட வாய்ப்பிருக்கிறது. ஆனால் மூன்றில் ஒரு பெண்ணுக்கு அவளது வாழ்நாளில் இதய நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

எல்லா வகையான புற்றுநோய்களிலும் இறக்கும் பெண்களை போல் இரு மடங்கு பெண்கள் இதயத் தாக்குதலினால் இறக்கின்றனர்.

நடைமுறையில் இதய நோய்கள் பற்றிய ஆராய்ச்சி முழுவதும் ஆண்களையே சுற்றிச் சுழல்கிறது. இதன் விளைவாக இதயநோயினால் பெண்களுக்கு நேருகின்ற இன்னல்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டு விட்டன.

பெண்களின் உடலில் சுரக்கின்ற எஸ்ட்ரோஜன் ஹார்மோன், நல்ல கொலஸ்ட்ராலுடன் உற்பத்தியை உயர்த்தி உடலுக்கு பாதுகாப்பளிக்கிறது.

மாதவிடாய் நிற்கும் வேளையில் எஸ்ட்ரோஜன் சுரப்பில் ஏற்படுகின்ற வீழ்ச்சி அவர்களை இதய நோய்களுக்கு இலக்காக்கி விடுகிறது. அறுபத்தைந்து வயதாகின்றபோது இதயத்தாக்கு ஏற்படும் வாய்ப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே அளவில்தான் இருக்கிறது.

சில வாழ்க்கை முறை மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டால் இதயம் தொடர்புடைய இன்னல்கள் பலவற்றைக் குறைத்து விடலாம்.

கொழுப்பையும், கொலஸ்ட்ராலையும் முடிந்த அளவுக்கு உணவிலிருந்து நீக்கி விடுவது நல்லது. ஆறுமாதங்களுக்கு ஒரு முறை ரத்த அழுத்தத்தையும், கொலஸ்ட்ரால் அளவையும் சோதித்துக் கொள்ளுங்கள்.

வீட்டிலும், அலுவலகம் மற்றும் வேலை பார்க்கும் இடங்களில் மன இறுக்கமும், பதட்டமும் இன்றி இயல்பாக வேலை பார்ப்பது முக்கியம். எளிமையான உடற்பயிற்சிகள், நடை பயிற்சிகள் செய்து வாருங்கள்.

உடற்பயிற்சி செய்து உடலை நல்ல செயல்பாடுகளோடு வைத்திருப்பவர்கள் இளமையுடன் மற்றவர்களை விட அதிக நாட்கள் வாழ்கிறார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

பெண்களுக்கு ஏற்படும் இதயக் கோளாறுகளில் முன்றில் ஒரு பங்கு அதிக எடை கொண்ட பெண்களுக்கே ஏற்படுகிறது. ஐந்தாறு கிலோ எடை கூடுதலாக இருந்தாலும் அதற்கான தொல்லையை அது உண்டாக்கி விடுகிறது.

சி.டி.சி. எனப்படும் நோய் தடுப்பு மையம் இளம்பெண்களுக்கான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஆண்களும், பெண்களும் தங்களது 25 வயது தொடங்கி 35 வயது வரையிலான கால இடைவெளியில்தான் அதிக அளவில் சதை போடுகிறார்கள்.

அதிலும் குறிப்பாக, பெண்களின் எடை அதிகரிப்பதற்கான வாய்ப்பு, ஆண்களை விட இருமடங்கு அதிகமாக உள்ளது என்று மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.