கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தின் இறுதியில் பெங்களூருவை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்தியாவின் 3வது பெரிய நிறுவனமான விப்ரோ 1.96 லட்சம் பணியாளர்களை கொண்டிருந்தது. தற்போது 4 மாதங்கள் கடந்த நிலையில், இந்நிறுவனத்தின் 600 பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளது. பணியாளர்களின் எண்ணிக்கை 2000ம் வரையிலும் செல்லும் என்று யூகிக்கப்படுகிறது.

இது தொடர்பாக விப்ரோ நிறுவனம் கூறுகையில், கடுமையான செயலாக்க மதிப்பீட்டு முறையான, அறிவுரை அளித்தல், மறு பயிற்சி மற்றும் பணியாளர்கள் திறனை உயர்த்துதல் போன்றவற்றை சீரான முறையில் விப்ரோ நிறுவனம் மேற்கொள்கிறது. அதன்படி வர்த்தக நோக்கங்கள், வாடிக்கையாளர்கள் தேவைகள் மற்றும் நிறுவனத்தின் அதிமுக்கியத்துவம் ஆகியவற்றுடன் பணியாளர்களை வரைமுறைப்படுத்தி கொள்கிறது. இதன் காரணமாக பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை வேற்படுகிறது.

பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்கள் பற்றி அந்நிறுவனம் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விப்ரோவின் 4வது காலாண்டு மற்றும் முழுவருட பணியாளர்களின் எண்ணிக்கை பற்றி வருகிற 25ம் தேதி அறிக்கை வெளியிடப்படும். இந்தியாவில் இயங்கி வரும் ஐடி நிறுவனங்களானது அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற பல்வேறு நாடுகளின் பணியாளர் விசா நடைமுறைகளில் விதிக்கப்படும் கட்டுப்பாடுகளினால் நிச்சயமற்ற சூழலை எதிர்கொள்கிறது.

தற்காலிக பணி விசாக்கள் அடிப்படையில் ஊழியர்களை பணியாற்றி வருகிறது. இந்நிலையில், வெளிநாடுகளில் விசா நடைமுறைகள் கடுமையாக்கப்பட்ட நிலையில் பணியாளர்களை அனுப்புவது போன்ற சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. செயற்கை முறையிலான கருவிகளின் பயன்பாடு காரணமாக பணியாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்திய ஐடி நிறுவனங்கள் கிட்டத்தட்ட 60 சதவிகித வருவாயை வட அமெரிக்க சந்தையிலும், 20 சதவிகித வருவாயை ஐரோப்பா சந்தையிலும், மீதமுள்ள வருவாயை பிற நாடுகளில் இருந்தும் பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.