“நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் பிரச்சனையையே கண்டு கொள்ளாமல் கருவாடு போல காய விட்டுவிட்டது மத்திய அரசு. இந்த லட்சணத்தில் சினிமாக்காரர்கள் ஸ்டிரைக் பண்ணினால், திரும்பி பார்ப்பாங்கன்னு நினைக்கிறீங்க?” – இப்படியொரு முணுமுணுப்பை பட்டிதொட்டியெல்லாம் பரப்பிவிட்டார் விஷால்! அவர் எடுத்த முடிவு அப்படி!

தமிழ்சினிமாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் பைரஸி பிரச்சனைக்கு, கலைஞர் ஆட்சியிலிருந்த காலத்திலிருந்தே கொடி பிடித்து வருகிறது கோடம்பாக்கம். இன்று பிராண்ட் பேண்ட்டுகளின் வளர்ச்சியும் வேகமும் இன்னும் இன்னும் என்று வளர்ந்து நிற்பதால், ஐந்தே நிமிஷத்தில் ஒரு படத்தை டவுன்லோட் செய்து, அலட்டிக் கொள்ளாமல் ரசிக்கும் கூட்டம் பெருகிவிட்டது. சினிமாவை காப்பாற்ற அதிரடியாக ஏதேனும் முடிவெடுத்தால் ஓழிய…எந்த சினிமாக்காரரும் நிம்மதியாக ஒரு கவளம் சோறு தின்ன முடியாத சூழல்.

இந்த நேரத்தில்தான் சுமார் ஒரு டசன் கோரிக்கைகளை முன்னிறுத்தி மே மாத இறுதியிலிருந்து தமிழகம் முழுக்க படப்பிடிப்புக்கு தடை, படங்களை ரிலீஸ் செய்யத் தடை, தியேட்டர்களை திறந்து வைக்க தடை என்று அதிரடி கிளப்பியிருக்கிறது விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம்.

இவர்கள் வைக்கும் கோரிக்கைகள் இதுதான்.

முதலில் மத்திய அரசுக்கான கோரிக்கை-

1.) GST என்கிற புதிய வரிக் கொள்கையில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது எங்கள் திரைப்பட துறையே.

2.) திரைப்படம் தயாரிப்பது என்பது ஒரு கலை. ஒரு படைப்பு. அப்படி தயாராகி மக்கள் பார்வைக்கு செல்லும் போது மட்டுமே அங்கு வணிகம் என்கிற நிலை வருகிறது எனவே திரைப்படம் முழுமையாகி வெளியிட தயாராகும் வரை மிகவும் குறைந்த பட்ச வரி விதிப்பாக 4 அல்லது 5 சதவிகிதம் மட்டுமே GST யாக இருக்க வேண்டும்.

3.) திரையரங்குகளில் திரைப்படம் வெளியிடும் போது தமிழ் திரைப்படங்களுக்கு குறைவாக GST விதிக்கப்படவேண்டும்.

4.) மத்திய அரசு புதிய மற்றும் உரிமை இல்லாத திரைப்படங்களை பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்கள் இதே தொழிலாக செய்து கொள்ளையடிக்கும் தொலைபேசி மற்றும் இணைய சேவை நிறுவனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். மத்திய அரசாங்கம் இதற்காக தனி கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.

5.) புதிய திரையரங்குகளுக்கு 5 வருடம் GST மற்றும் பலவித வரிகளில் இருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டும்.

6.) திரைப்பட தொழிலையும் அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக நினைத்து மற்ற தொழில் செய்வோருக்கு இருக்கும் அனைத்து வசதிகளையும் மரியாதையையும் அளிக்க வேண்டும். இது எங்கள் 75 வருட கோரிக்கை.

மாநில அரசுக்கு எங்கள் வேண்டுகோள்

1.) திரையரங்கு கட்டணமுறையில் பெரும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய காலம் இது. திரையரங்குகளின் தன்மை , இருக்கும் இடம் , ரசிகர்களுக்கு தரும் வசதிகள் , பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சிறப்பு கட்டணம் என பலவகை மாற்றங்கள் கொண்டு வர அரசு எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

2.) திருட்டு வி.சி.டி ஒழிப்பில் மாநில அளவில் காவல்துறையின் சிறப்பு தடுப்பு பணியில் குறைந்தபட்சம் 1000 நபர் கொண்ட டீம் அமைக்க பட வேண்டும். இப்போது இருக்கும் 96 நபர்கள் கொண்ட டீம் போதவில்லை.

3.) திரைப்பட துறையினரே இந்த பைரசி தடுப்புக்கு என ஒரு அணி அமைத்து போராட அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.

4.) அரசு கேபிள் தலைமையில் உள்ள கேபிள் டி.வி ஆபரேட்டர்களும் மற்றும் சில தனியார் கேபிள் டிவி தலைமையில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எங்கள் திரைப்படங்களை முழுமையாகவும் சில காட்சிகளாகவும் , பாடல் காட்சிகளாகவும் 24மணி நேரமும் தொடர்ந்து ஒளிபரப்பும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. இதை இரும்பு கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும்.

5.) உரிமம் இன்றி திரைப்படங்கள் மற்றும் காட்சிகள் ஒளிபரப்பும் பேருந்துகள் அனைத்திற்கும் அவற்றின் தொழில் உரிமமே ரத்து ஆகும் வகையில் அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.

6.) ஒரே இடத்தில் இரு திரையரங்குகள் இருப்பின் அவற்றை “ Multiplex” என்ற பெயரிலேயே கருத வேண்டும்.

7.) ஒரு திரையரங்கு உள்ள இடத்தில் இரண்டு அல்லது மூன்று சிறிய திரையரங்குகளாக மாற்றிக்கொள்ளும் உரிமை உரிமையாளர்களுக்கு தரப்பட வேண்டும். அதற்கான அனுமதிகள் எளிமையாக்கப்பட வேண்டும்.

8.) இந்த துறையின் உடனடி வளர்ச்சிக்கு சிறிய அரங்குகள் ( மினி தியேட்டர் ) மாநிலம் முழுவதும் கட்டப்படவேண்டும். இதற்கான அனுமதி முறைகள் எளிதாக்கப்பட வேண்டும். மேலும் திரையரங்குகள் புதிதாக அமைக்கவும் புதுபித்து கொள்ளவும் அனுமதி , விண்ணப்பம் 6௦ நாட்களில் வழங்கப்பட வேண்டும். (தெலுங்கானா அரசு இதனை சிறப்பாக அமுல்படுத்தியுள்ளது.)

இப்படி போகிறது அந்த வேண்டுகோள்- இவற்றையெல்லாம் இரு அரசுகளும் செய்து தரும் வரை காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளப் போகிறார்களாம்.

வருஷக்கணக்காக வாழ்வுரிமைக்காக போராடும் பொதுமக்களுக்கே செவி சாய்க்காத அரசு, சினிமா என்கிற சின்னஞ்சிறு ஏரியாவுக்காக தலை குனிந்து காது கொடுக்குமா? அரசு எந்திரம் என்கிற அசகாய சூரனை விஷால், தன் படத்தில் வரும் வில்லனை போல சாதாரணமாக நினைத்துவிட்டாரா என்கிற கேள்விகள் எழாமல் இல்லை.

பொருத்திருந்து பார்ப்போம்!