tmail-movie-release-black-money

திரையுலகமே கருப்புப் பணத்தில்தான் சுழன்று கொண்டிருக்கிறது என்று சொல்பவர்கள்தான் அதிகம். தங்களுடைய உண்மையான வருமானத்திற்கு நேர்மையாக கணக்குக் காட்டி வருமான வரி கட்டுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். ஒரு ஹீரோவுக்கோ, ஹீரோயினுக்கோ சம்பளம் பேசும் போதே வெள்ளையில் இவ்வளவு, கருப்பில் அவ்வளவு என்றுதான் பேசுவார்கள். அது ஒரு படத்தை வியாபாரம் செய்யும் வரை நீண்டு கொண்டே இருக்கும்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் திடீர் அறிவிப்பால் இந்தியாவில் உள்ள பலர் அதிர்ச்சியடைந்துள்ளார்கள். குறிப்பாக திரையுலகத்தில் உள்ள பலர் மிரண்டு போய் உள்ளார்கள். தங்களது படங்கள் 100 கோடி வசூல் செய்தது என்று சொல்பவர்கள் அதில் எவ்வளவு கருப்புப் பணம் என்பதை இதுவரை சொன்னதில்லை.

இதனிடையே நாளையும், நாளை மறுதினமும் அச்சம் என்பது மடமையடா, கடவுள் இருக்கான் குமாரு, மீன் குழம்பும் மண்பானையும் ஆகிய படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.கடவுள் இருக்கான் குமாரு படத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதால் அந்தப் படம் இந்த வாரம் வெளியாகுமா என்பது சந்தேகமே.

அதோடு அச்சம் என்பது மடமையடா படம் ஏற்கெனவே நிதிச் சிக்கலில் உள்ள படம். பொதுவாக ஒரு படம் வெளியாவதற்கு ஒரு தினம் முன்னர்தான் வினியோகஸ்தர்களும், தியேட்டர்காரர்களும் முன்பணம் கொடுத்து படங்களை வாங்கிச் செல்வார்கள்.

நேற்றைய பிரதமரின் அறிவிப்பாலும், இன்று வங்கிகள் விடுமுறை என்பதாலும் இந்த வாரம் வெளிவர உள்ள படங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், தயாரிப்பாளர்கள் முன் பணம் வாங்குவதில் தடங்கல்கள் வர வாய்ப்புள்ளது. எனவே இந்த வாரம் திட்டமிட்டபடி படங்கள் வருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

அப்படியே வந்தாலும், கையில் 500, 1000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்பவர்கள் அவற்றை மாற்றுவதற்குத்தான் முயல்வார்களே தவிர, திரைப்படங்களைப் பார்க்க தியேட்டர் பக்கம் வர மாட்டார்கள். அதனால், படங்கள் வெளிவந்தாலும் வசூல் பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உள்ளது. சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் என்ன முடிவுகளை எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே இந்த வாரப் படங்களின் வெளியீடுகள் இருக்கும்.