Connect with us

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்வாரா கமல்ஹாசன்? பெப்சியின் திடீர் அறிவிப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெப்சி அமைப்பைச் சேர்ந்த தொழிலாளர்களுக்குப் பணி வழங்காததைக் கண்டித்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசன் தொடங்கியிருக்கிறது. முதல் சீசனின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீசன் பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியை மும்பையைச் சேர்ந்த எண்டோமால் ஷைன் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. இதற்காக பூந்தமல்லியில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் பிக்பாஸ் வீடு செட் போடப்பட்டிருக்கிறது. வீட்டுக்குள் 60 கேமராக்கள், மற்றும் படப்பிடிப்பு தளத்தில் 10க்கும் மேற்பட்ட கேமராக்கள் என பிரமாண்டமாக ஒளிப்பதிவு செய்யப்படும் இந்த நிகழ்ச்சிக்காக ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இரவு பகலாக உழைத்து வருகின்றனர்.

தமிழகத்தில் நடத்தப்படும் ஷூட்டிங்குகளில் திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தைச் சேர்ந்த தொழிலாளர்களையே அதிகம் பயன்படுத்த வேண்டும் என அந்த சங்கம் தொடர்ந்து அறிவுறுத்தி வந்திருக்கிறது. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பெரும்பாலானா தொழிலாளர்கள் வட மாநிலத்தவரே பயன்படுத்தப்பட்டனர். இதுகுறித்து பெப்சி அமைப்பு சார்பில் கேள்வி கேட்கப்படவே, முதல் சீசன் என்பதால் நமது தொழிலாளர்களுக்கு சரியாக புடிபடாது. இரண்டாவது சீசனில் நிச்சயம் பயன்படுத்திக் கொள்வோம் என பிக்பாஸ் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சொல்லப்பட்டது. இப்போது இரண்டாவது சீசன் தொடங்கிவிட்டது. ஆனால், சொன்னபடி தயாரிப்பு நிறுவனம் பெப்சி தொழிலாளர்களுகு வேலைவாய்ப்பு வழங்காமல், 90 சதவீத வடமாநில தொழிலாளர்களைப் பயன்படுத்தி ஷூட்டிங்கை நடத்தி வருகிறது.

இதை எதிர்த்து பெப்சி தொழிலாளர்கள் பிக்பாஸ் ஷூட்டிங்கை நிறுத்தக் கோரி முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சொன்னபடி இல்லாமல் 10 சதவீத பெப்சி ஊழியர்கள் மட்டுமே பயன்படுத்தப்படுவதற்கு அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் குஷ்பு இந்த விவகாரத்தில் தலையிட்டு தொழிலாளர்கள் மற்றும் பிக்பாஸ் தயாரிப்பு நிறுவன தரப்பில் பேச்சு நடத்தியிருக்கிறார். இதனால், சமாதானமடைந்த தொழிலாளர்கள் குஷ்பு அறிவுரைப்படி அவகாசம் கொடுத்திருக்கின்றனர்.

இதுகுறித்து பேசிய பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, இந்த விவகாரம் தொடர்பாக சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறோம். எங்கள் ஊழியர்களைப் பயன்படுத்தவில்லை என்றால், ஷூட்டிங்கை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். நடிகர் கமலும் எங்கள் அமைப்பின் உறுப்பினர். அவர் பல நேரங்களில் சம்மேளனத்துக்கு ஆதரவாக நின்றிருக்கிறார்.

அதனால், இந்த விவகாரத்திலும் எங்களுக்கு ஆதரவு அளிப்பார் என்று நம்புகிறோம். உரிய நீதி கிடைக்கவில்லை என்றால் எங்கள் போராட்டம் தொடரும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இன்று ஒருநாள் சின்னத்திரை படப்பிடிப்புகளில் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறோம் என்றார். இந்த கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் கமலும் புறக்கணிப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top