கடந்த 8-ம் தேதி முதல் மெரினா, அலங்காநல்லூர், திருப்பூர், திருச்சி என தமிழகமெங்கும் மற்றும் உலகெங்கும் மாணவர்களும் இளைஞர்களும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு வேண்டும் என தங்கள் ஆதரவை தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நாளுக்கு நாள் இந்த போராட்டத்தின் அளவு பெரிதாகிக் கொண்டே வருகிறது. நூறுகளில் தொடங்கிய இந்த போராட்டம், நேற்று லட்சங்களுக்கு சென்று, இன்று ஆறு லட்சம் மக்கள் வரை வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த போராட்டத்தின் அளவை கருதி விக்கிபீடியா இணையதளத்தில் மிக விரிவான ஒரு பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு நபரை பற்றியும், ஊரை பற்றியும், சம்பவம், டெக்னாலஜி என அனைத்து விஷயங்களைப் பற்றியும் தெரிந்துகொள்ள உலகம் முதலில் கையில் எடுப்பது விக்கிபீடியாவைதான். கூகுளை விடவும் அதிகம் நம்பப்படும் ஒரு முக்கியமான இணையதளம் விக்கிபீடியாதான்

“2017 Jallikattu Protests (2017 ஜல்லிக்கட்டு போராட்டம்)” என்று பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்த பக்கம் இளைஞர்கள் நடத்தும் போராட்டத்தை பற்றி அனைத்து விவரங்களையும் கூறுகிறது. அப்பக்கம் கீழ் காணும் தலைப்புகளில் விரிவான தகவல்களை பதிவு செய்திருக்கிறது.

– போராட்டத்தின் கோரிக்கைகள்
– சட்ட சிக்கல்கள்
– போராட்ட முறை
– போராட்ட ஆதரவாளர்கள்

மேலும், இந்த போராட்டத்தில் பத்து லட்சம் மக்கள் கலந்து கொண்டு உள்ளதாக அந்த பக்கம் கூறியுள்ளது. போராட்ட முறையாக அமைதி மற்றும் சமூக ஊடகங்கள் என்று அந்த பக்கம் கூறுகிறது. ஒரு பிரபலமான மீம் சொல்வது போல, 50 எம்.பி இன்டர்நெட் சேவை நம் இளைஞர்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது. போராட்டத்தின் கோரிக்கையாக ஜல்லிகட்டு மற்றும் அல்லாமல், விவசாயிகள் பிரச்னை, கோக் பெப்சி போன்ற நிறுவனங்களிலிருந்து தயாரிக்கப்படும் பானங்களுக்கு தடை என்ற ஒரு நீண்ட பட்டியல் இடம் பெற்றுள்ளது.

20-ம் தேதி தொடங்கப்பட்ட இந்தப் பக்கத்தை ஒரே நாளில் 25000 பேருக்கும் மேல் பார்வையிட்டிருக்கிறார்கள். ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் இந்த பக்கம் எழுதப்பட்டிருக்கிறது. இன்னும் மற்ற மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்படும் என விக்கிபீடியாவில் செயல்படும் தன்னார்வலர்கள் கூறியிருக்கிறார்கள்.

ஜல்லிக்கட்டு போராட்டம் இந்தத் தலைமுறையின் மிக முக்கியமான நிகழ்வு. இதை வரலாற்றில் முழுமையாக பதிவு செய்யப்பட வேண்டும். புகைப்படங்கள், வீடியோக்கள், கட்டுரைகள் என அனைத்து வடிவங்களிலும் இந்தப் போராட்டத்தின் வீரியத்தை பதிவு செய்ய வேண்டுமென சமூக வலைதளங்களில் பெரும்பாலானோர் எழுதி வருகிறார்கள். விக்கிபீடியா இதை செய்திருப்பதை அதற்கான ஆக்கபூர்வமான தொடக்கமாக கொள்ளலாம். இணையத்தையும், இணையமல்லாத வடிவங்களிலும் இளைஞர்களின் இந்த எழுச்சி முழுமையாக பதிவு செய்யப்படும் என நம்பலாம்.

தலைவன் இல்லாமல் தன் இனத்தின் விடுதலைக்காகவும், தங்களின் உணர்வுக்காகவும் திரண்ட இளைஞர் படைக்கு கிடைத்த இந்த சர்வதேச அங்கீகாரம் அவர்களின் நோக்கத்தை மேலும் மேம்படுத்தும்.