‘கெத்து’ படத்தை அடுத்து உதயநிதி, இந்தியில் சூப்பர் ஹிட்டான ஜாலி எல்.எல்.பி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் உதயநிதிக்கு ஜோடியாக ஹன்சிகா நடித்து வருகிறார்.

மேலும், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். அஹ்மத் இப்படத்தை இயக்கி வருகிறார்.பெயர் வைக்காமலேயே நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

சமீபத்தில் இப்படத்திற்கு மனிதன் என்று பெயர் வைக்கப்பட்டது. ரஜினி நடித்து சூப்பர் ஹிட்டான படங்களின் தலைப்பு தற்போது புது படங்களுக்கு வைக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து இயக்குனர் அஹ்மத் கூறும்போது, இந்த படத்தின் கதாநாயகன் ஆரம்பத்தில் பல தவறுகள் செய்பவராகவும், பின்னர் மனம் திருந்தி நல்ல மனிதனாக மாறுவதுமாக கதையை உருவாக்கியிருக்கிறோம்.

இதன் காரணமாக இந்த படத்திற்கு ‘மனிதன்’ என்ற தலைப்பு வைத்தால் படத்தின் கதைக்கு பொருத்தமாக இருக்கும் என கருதி இந்த தலைப்பை வைத்திருக்கிறோம் என்றார்.

மேலும் இந்த படத்தின் தலைப்பை வைப்பதற்காக, ரஜினியின் ‘மனிதன்’ படத்தை தயாரித்த ஏவிஎம் நிறுவனத்திடம் முறைப்படி அனுமதி வாங்கியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.