Tamil Cinema News | சினிமா செய்திகள்
பெண்கள் ஆண்களுடன் அதை பேச தயங்குவது ஏன்?
புரிந்து கொள்ளப்படாமலே போய்விடுகிற அன்புதான் உலகத்தின் மிகப்பெரிய சோகம். பண்பாடு என்ற பெயரில் பழமையைப் பேணும் பிரதிநிதிகளாக பெண்கள்தான் இருக்க வேண்டும் என்பது இந்த ஆணாதிக்க சமுதாயத்தின் சாபக்கேடு. இந்த விதிகள் பரவலாக இன்னும் நம்மை ஆண்டுகொண்டு தான் இருக்கின்றன.
பெண்கள் இன்று பல்வேறு சாதனைகள் புரிந்து உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கின்றனர். பிறந்த நாட்டிற்கும், வீட்டுக்கும் எண்ணில் அடங்கா பெருமை சேர்த்துள்ளனர்.
பெண்குழந்தையை ஆரம்பத்தில் இருந்தே பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் வளர்ப்பதாக எண்ணி கோழையாக வளர்த்து விடுகிறோம். வளர்ப்புமுறையில் பாகுபாடு காட்டும் மனோநிலை இன்றும் நம் வீடுகளில் காண முடிகிறது. இவ்வாறான பாகுபாடே பாலியல் வன்முறைகள் அதிகரிப்பதற்கான காரணிகளாக அமைந்து விடுகின்றன.
திருமணத்திற்கு முன்பு தந்தை, மற்றும் சகோதரனின் கட்டுப்பாடு, திருமணத்திற்குப் பின் கணவனின் கட்டுப்பாடு, பின் நாளில் மகனின் கட்டுப்பாடு என பெண் என்பவள் தன்னை அறியாமலேயே வரையறுக்கப்படாத வட்டத்திற்குள் வந்துவிடுகிறாள்.
ஆனால், ஆண் பிள்ளைகளை குழந்தைப் பருவத்தில் இருந்தே கட்டவிழ்த்து விட்டுவிடுகிறோம். அவனது குறும்புத்தனமான செயல்களை நாம் தட்டிக்கேட்பதில்லை. பெண் குழந்தைகளுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகளை விதிக்கும் நாம், பதின் பருவத்தில் ஆண் பிள்ளை உணர்ச்சிவயப்பட்டு செய்யக்கூடிய செயல்களை நாம் கவனிப்பதில்லை.கண்டுகொள்ளாமலேயே விட்டுவிடுகிறோம்.
கற்பு நெறியில் பெண்கள் கண்ணகியாய் வாழவேண்டும் என்று சொல்லும் இதே சமூகம் தான் ஆண்களிடம் கோவலனாக வாழக் கூடாது என்று வலியுறுத்துவதில்லை. இப்படியான இறுமாப்புடைய சமுதாயத்தில் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
பெண்கள் ஏன் காமம் பேச தயங்குகின்றனர்?
ஆண்களை சுதந்திரமாக வீதிகளில் உலாவ விட்ட இந்த சமுதாயத்தின் So called கட்டுப்பாடுகள், கலாச்சாரம், பண்பாடு… பெண்களுக்கு மட்டும் ஏனோ மத்திய அரசு நீட் தேர்வுக்கு விதித்ததை விட பல மடங்கு கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது. அவ்வாறான நிபந்தனைகளை உடைத்தெறிந்து வெளியே வரும் பெண்கள் மீது இவ்வாறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
- காமம் பேசும் பெண் நிச்சயம் ஒழுக்கம் கெட்டவளாகத்தான் இருப்பாள்.
- அவளுக்குப் பல ஆண்களுடன் தொடர்பு இருக்கலாம்.
- வளர்ப்பு சரியில்லாதவள்.
- பிஞ்சியிலேயே பழுத்திருக்கலாம்.
- பலரோடு உடலுறவுக் கொண்டவளாக இருக்கலாம்.
- ஆண்கள் தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பர்.
- ஆண்கள் தவறான கண்ணோட்டத்தில் அணுக நேரலாம்.
- சர்ச்சைகுரியவள்.
- மரபு மீறியவள்.
- குடும்பத்தின் பெயரை கெடுப்பதற்கென்றே பிறந்தவள்
பெண் ஒன்றும் காமத்திற்கு அப்பாற்பட்டவள் கிடையாது. காமம் இரு பாலருக்குமான பேசு பொருளாகி நீண்ட காலம் ஆகிவிட்டது. உடலின் வேட்கையையும் காமத்தின் தாகத்தையும் சங்க இலக்கியங்களில் பெண் புலவர்கள் லயித்து பாடியிருப்பதை நாம் அறிவோம்.
தலைவனுக்காகத் தலைவியும் தலைவிக்காகத் தலைவனும் பாடும்படியான பலபாடல்களில் காமத்திற்குப் பிரதான இடமுண்டு. ஆனால் தற்போதைய சூழலில் காமத்தைப் பற்றி பொதுவெளியில் ஒரு பெண் வெளிப்படையாக பேசினால் உடனடியாக அவளது ஒழுக்கம் கேள்விக்குள்ளகிறது. விவாதத்திற்கு உட்படுத்தப்படுகிறது. காமத்தை வெளிப்படையாக பேசுவதும், ஆள்வதும் ஆணாக மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற நிலை இங்கு பறந்துபட்டு காணப்படுகிறது.
ஒரு பெண் தனது கணவனிடம் காமம் குறித்த தனது சந்தேகங்களை தீர்த்துக்கொள்கிறாளா என்று கேட்டால், பெரும்பாலும் இல்லை என்றே கூறப்படுகிறது. காமம் பேசுதல் இந்திய அல்லது தமிழ்ப் பெண்களிடையே ஒரு அந்தரங்கமான, நெருடலான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் கிளர்த்துதலுக்கு அப்பால் காமம் மனம் சார்ந்த விஷயமாக பார்க்கப்படுகிறது. ஆனால், ஒரு எல்லைக்குள் தன்னை இருத்தி வைத்து கொள்வதுதான் பெண்ணின் மனநிலையாகத் தொடர்ந்து இருந்து வருகிறது.
பெண்களே நீங்கள் அதிகமாக உங்களை வெளிப்படுத்துங்கள். இதை ஆடைக்குச் சொல்லவில்லை. உங்கள் ஆசைகள், தேவைகள், வலிமைகள், பெருமைகள, திறமைகள், இவைகளை வெளிப்படுத்துங்கள். எற்கனவே சொன்ன மாதிரி மறுக்க வேண்டிய விசயங்களை மறுத்துவிடுங்கள், கேட்க வேண்டிய விசயங்களை கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். தேவைக்கு மீறி ஆசைப்படாதீர்கள், தேவையை கேட்க அஞசாதீர்கள். பெண்களுக்கு என்று சொன்ன இலக்கணங்கள் ஆணுக்கும் பொருந்தும். ஆணுக்குச் சொன்ன இலக்கணங்கள் பெண்ணுக்கும் பொருந்தும்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
