சசிகலா சிறை தண்டனை பெற்றுள்ளதை தொடர்ந்து,போயஸ் இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பு ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் வசம் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தவுடன்,அவரது போயஸ் இல்லம் யாருக்கு சொந்தம் என்ற கருத்துகள் அப்போதே எழுந்தன.ஆனால் அவற்றுக்கு வாய்ப்பளிக்காமல்,அதிமுகவின் பொதுச் செயலாளரான சசிகலா,போயஸ் கார்டன் இல்லத்திலேயே தொடர்ந்து வசித்து வந்தார்.
இந்நிலையில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தமிழக முதல்வர் ஓ.பி.எஸ்,போயஸ் கார்டன் இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவிடமாக்குவேன் என அறிவித்தார்.இதற்கான கையெழுத்து இயக்கத்தையும் அவர் தொடங்கினார்.

இந்நிலையில் சிறைக்கு சென்றாலும்,போயஸ் இல்லத்தின் உரிமை வேறு யாருக்கும் சென்று விடக் கூடாது என்பதில் சசிகலா கவனமாக உள்ளார்.எனவே சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வரும்,ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கிடம் போயஸ் இல்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.ஏனெனில் ஜெயலலிதாவின் வாரிசு போல் அதிமுக தொண்டர்களால் பார்க்கப்பட்டு வரும் ஜெ.தீபா,எந்த விதத்திலும் போயஸ் இல்லத்திற்கு உரிமை கோரி விடக்கூடாது என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை கட்டுவதற்கான சூழல் இல்லை எனில்,போயஸ் கார்டன் இல்லம் ஏலத்திற்கு செல்லலாம் எனவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.