இந்து வாரிசு உரிமை சட்டம், பிரிவு 15, 16-ன்படி, ஒரு பெண்ணின் சொத்துக்கள் முதலில் மகன், மகள் மற்றும் கணவருக்குச் சமமாகச் சென்று சேரும். இவர்கள் யாருமே இல்லாதபட்சத்தில் அந்தப் பெண்ணின் கணவருடைய வாரிசுகளுக்கு சென்று சேரும். அதாவது, கணவருடைய தாய் அல்லது கணவருடைய இரண்டாம் தாரத்தின் பிள்ளைகளுக்குச் சென்று சேரும்.

ஒரு பெண் திருமணம் ஆகாமல் மரணம் அடையும்போது, அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்குச் சொத்துக்கள் போகும். அவரது பெற்றோர்கள் இறந்துவிட்டால், பெற்றோரில் தந்தையின் வாரிசுகளுக்கு, அந்த சொத்து சென்று சேரும். ஒருவேளை அந்தப் பெண்ணின் தந்தைக்கும் வாரிசுகள் இல்லையென்றால், தாயின் வாரிசுகளுக்கு சென்று சேரும்.

இந்த சட்டத்தின்படி பார்ப்போமேயானால், ஜெயலலிதாவின் சொத்துக்கள், அவருடைய தந்தை ஜெயராமனின் வாரிசான ஜெயக்குமாரின் வாரிசுகளுக்குப் போகும். அதாவது, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கோர முடியும்.

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஜெயலலலிதா தன்னுடைய சொத்துக்கள் குறித்து, உயிலோ அல்லது வேறு ஆவணங்களோ எதுவும் எழுதி வைக்காமல் இருக்கும் பட்சத்திலேயே இது நடக்கும்.

ஒருவேளை, ஜெயலலிதா வேறு யாருக்கும் தன்னுடைய சொத்துக்களை உயில் எழுதி வைக்காத நிலையில்தான், அந்த சொத்துக்கு அவருடைய அண்ணன் பிள்ளைகளான தீபா, தீபக் உரிமைகோர முடியும். மாறாக, ஜெயலலிதா உயில் எழுதிவைத்திருந்தால், அந்த உயிலில் ஜெயலலிதா யாரைக் குறிப்பிட்டுள்ளாரோ அவருக்குத்தான் அந்தச் சொத்துக்கள் போய்ச் சேரும்.