அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை ரூ.16,347.5 கோடிக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் வாங்கியுள்ளது.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் 2008ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் பிசிசிஐ மூலம் நடத்தப்பட்டு வருகிறது. பத்து ஆண்டுகை நிறைவு செய்துள்ள இத்தொடர் ஒவ்வொரு ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறுவது வழக்கம். ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை பெற்ற சோனி நிறுவனத்தின் ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் முடிந்துள்ளது.

இதையடுத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஐபிஎல் தொடரை ஒளிபரப்பும் உரிமத்துக்கான ஏலம் இன்று நடைபெற்றது. இதில், ரூ.16,347.5 கோடி ஏலத்தொகைக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் ஐபிஎல் தொடருக்கான ஒளிபரப்பு உரிமையை வளைத்துப் போட்டிருக்கிறது.

இருபதுக்கும் அதிகமான நிறுவனங்கள் போட்டியிட்ட இந்த ஏலத்தில் ரூ.12 ஆயிரம் கோடி முதல் ரூ.14 ஆயிரம் கோடி வரை ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை விற்கப்படலாம் என்று கணிக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்ப்பை மிஞ்சும் வகையில் மிக அதிகமான தொகைக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை கைப்பற்றியுள்ளது.