ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே.நகர் தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எந்த மாதிரியான அறிவிப்புகளை வெளியிடுவார் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு தமிழகத்தில் பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அவரது ஆதரவாளரான எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பங்கேற்பதற்கு பல்வேறு எதிர்ப்புகள் நிலவியது, நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திமுக அமளியில் ஈடுபட்டது, ஜனாதிபதி, ஆளுநரிடம் முறையீடு உள்ளிட்டவை நிகழ்ந்தன.
இந்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக இருந்த தீபக்கோ, தனது ஆதரவு எப்போதும் பன்னீர் அண்ணனுக்குதான் என்றும், அதிமுக துணை பொதுச் செயலாளர் பதவியை அலங்கரிக்க தினகரனுக்கு எந்த வித தகுதியும் இல்லை என்றும் அவர் நேற்று தெரிவித்தார்.

ஜெயலலிதாவின் இறப்புக்குப் பின்னர், முதல்முதலாக கொண்டாடப்படும் பிறந்த நாளான இன்று தீபா, பன்னீர் செல்வம் ஆகியோர் முக்கிய முடிவுகளை வெளியிடலாம் என்று பரவலாக பேசப்பட்டு வந்தது. இதில் ஒருபடி மேலே போய், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இன்று புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாகவும், ஆர்.கே. நகரில் பன்னீர் செல்வம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள போவதில்லை என்றும் தீபா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதிலிருந்து தீபாவின் ஆதரவு ஓபிஎஸ்-ஸுக்கு இல்லை என்று ஊர்ஜிதமாகியுள்ளது.

ஓ.பன்னீர் செல்வத்துக்கு தீபக் ஆதரவு அளித்ததை அடுத்து தி.நகரில் உள்ள தீபாவின் வீட்டின் முன் திரண்ட ஆதரவாளர்கள் கட்சியும், ஆட்சியும் தீபாவிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், இன்று அவர் எடுக்கப் போகும் முடிவுக்கு கட்டுபடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறவுள்ள கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் முக்கிய முடிவை அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித் துறையின் முன்னாள் அமைச்சர் மாஃபா ஆர். பாண்டியராஜன் நேற்று பேட்டி அளித்தார். அப்படி அவர் என்னதான் முடிவு எடுக்கப் போகிறார் என்று அவரது ஆதரவாளர்களும், பொதுமக்களும் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அதிமுகவில் இருந்து வழிதவறி சென்றவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக் கொள்ளப்படுவர் என்று தினகரன், தம்பிதுரை உள்ளிட்டோர் தெரிவித்திருந்த நிலையில் அவர் தாய் கட்சிக்கே மீண்டும் செல்வாரேயானால் சசிகலா மீது உள்ள வெறுப்புகள் மொத்தமாக ஓ.பன்னீர் செல்வத்தின் மீது திரும்பும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதனால் அது போன்ற ஒரு முடிவை அவர் எடுக்கமாட்டார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

எடப்பாடிக்கு ஆதரவளித்த 122 எம்எல்ஏ-க்களில் யார் யார் தமக்கு சாதகமாக இருந்தார்கள் என்பதை பன்னீர் செல்வம் வெளிப்படையாக தெரிவித்து கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் கூவத்தூரில் அடைக்கப்பட்டிருந்த எம்எல்ஏ-க்கள் அடித்து கூத்துகளை ஆதாரத்துடன் வெளியிடவுள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் எம்.பி.சுந்தரம் தெரிவித்து எம்எல்ஏ-க்கள் வயிற்றில் புளியைக் கரைத்தார்.

எம்.பி. சுந்தரம் சேகரித்துள்ளதாக கூறப்படும் ஆதாரங்களை இன்று வெளியிடுவதன் மூலம் ஏற்கெனவே எடப்பாடிக்கு ஆதரவளித்ததால் கொதித்து போயுள்ள மக்கள் மீண்டும் கொந்தளிப்பில் ஈடுபட்டு அந்த எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி ஜல்லிக்கட்டு போன்ற மிகப் பெரும் மக்கள் புரட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.

நேற்று வந்த தீபாவே புதிய கட்சியைத் தொடங்கும்போது ஜெயலலிதாவின் நன்மதிப்பை பெற்ற, நம்பிக்கைக்குரியவரான தனது தலைவர் பன்னீர் செல்வம் ஏன் புதிய கட்சியைத் தொடங்கக் கூடாது என்று கருதலாம். ஆனால் பன்னீர் செல்வம் தரப்போ அதிமுக என்றால் அது நாங்கள் தான் என்றும், ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர் ஓ.பன்னீர் செல்வம்தான் என்றும் கூறுவதால் புதிய கட்சியை அவர் தொடங்கமாட்டார் என்பதை மறுக்க முடியாது.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாள்களாக அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா திடீரென டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தமிழக மக்கள் ஆணித்தரமாக நம்புகின்றனர். ஜெயலலிதா மரணத்துக்குப் பின்னர் நீண்ட நாள்களாக வாய் திறக்காத மருத்துவமனை நிர்வாகமும், லண்டன் மருத்துவர் பீலேவும் சசிகலா பதவியேற்க தயாராக இருந்த நாளுக்கு ஒரு நாள் முன்னர் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது.

அப்போது லண்டன் மருத்துவர் பீலே இருந்தார். ஆனால் சசிகலாவின் உறவினர் சிவகுமார் இல்லை. அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி ஏன் வரவில்லை என்று கேட்டதற்கு அவர் குடும்ப விழாவில் கலந்து கொள்ளவுள்ளதால் வரவில்லை என்று உப்பு சப்பு இல்லாத காரணத்தை மருத்துவர் பாலாஜி தெரிவித்தார்.

இந்நிலையில் அவரது மரணம் குறித்து விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று ஓபிஎஸ் தெரிவித்திருந்த நிலையில் எல்லாம் தலைகீழாக மாறியது. இதனால் ஆர்.கே.நகரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் உண்மையான மருத்துவ அறிக்கையை ஓபிஎஸ் தரப்பு வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.