செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ஏ.ஆர்.ரஹ்மான் எப்படிப்பட்டவர்? அவரை பிரிந்தது ஏன்? சாய்ரா பானு ஆடியோ

ஏ.ஆர்.ரஹ்மான் தன் 30 வயதில் சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். திரைத்துறையில் உள்ள அன்பான, அமைதியாக எல்லோருக்கும் முன்மாதிரியான ஜோடியாக இத்தனை ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இத்தம்பதிர்க்கு 2 பெண் மற்றும் 1 ஆண் என 3 குழந்தைகள் உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றவர்களைப் போல் இல்லாமல் கடவுள் பக்தி, குடும்பத்தைப் பார்த்துக் கொள்ளுதல், பிள்ளைகளின் படிப்பு இதெல்லாவற்றிலும் சரியான கவனம் செலுத்தி சிறந்த தந்தையாகவும், அவரது பணியே இசையும், இசைசார்ந்த பணிகளும் தான் என்பதால் ஒவ்வொரு படத்திலும், ஆல்பத்திலும் ஹிட் பாடல்கள் கொடுத்து, கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

இந்திய சினிமாவில் இசையமைப்பாளருக்கான முதல் ஆஸ்கர் விருதை வாங்கி இந்தியாவை உலகளவில் பெருமைப்பட வைத்தவர். இதுவரை நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்து, தன் வியாபாரத்தை உலகச் சந்தையில் விரிவுபடுத்தியதுடன், இந்திய இசையையும் உலகளவில் கொண்டு சென்ற தமிழர். இப்படி எத்தனையோ சிறப்புகள் கொண்டுள்ளவர் ஏ.ஆர்.ரஹ்மான். இந்தியாவின் பொக்கிசமாகப் பார்க்கப்படுபவர்.

சில நாட்களுக்கு முன்பு ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்தார். இது திரைத்துறையினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து யூடியூப் சேனல்களும், ஊடகங்களும் வதந்தி பரப்பி வந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதற்கான காரணம் பற்றி சாய்ரா பானு ஒரு ஆடியோ வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மானை பிரிந்தது ஏன்? சாய்ரா பானு விளக்கம்

அதில், ’’சாய்ரா ரஹ்மான் பேசுகிறேன். நான் இப்போது மும்பையில் இருக்கிறேன். எனக்கு கடந்த இரண்டு மாதங்களாகவே உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறேன். எனது உடல் நலக்குறைவு என்பது யாருக்கும் பிரச்சனையாக இருந்துவிடக் கூடாது.
எனது உடல் நலக்குறைவால் ஏ.ஆர்.ரஹ்மானின் பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காகத்தான் அவரை பிரிந்து வாழ முடிவெடுத்தேன்.

எனவே எங்கள் பிரிவு பற்றி யாரும் தவறான கருத்துகளை சொல்ல வேண்டாம். ஏ.ஆர்.ரஹ்மான் உலகிலேயே சிறந்த மனிதர். இப்போது எங்கள் இருவருக்கும் ஒரு இடைவெளி தேவைப்பட்டதால் பிரிந்திருக்கிறோம். ஆனால், எதையும் நாங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை; உடல் நிலையில் முன்னேற்றம் வந்ததும் விரைவில் சென்னைக்குத் திரும்புவேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் நெகிழ்ச்சி

இந்த நிலையில் இவ்விவகாரத்தில், தன்னைப் பற்றிய அவதூறுகள் வதந்திகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று மீடியாக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், சாய்ரா பானுவின் ஆடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் உலகிலேயே சிறந்த மனிதர் என்று கூறியதைக் கேட்டு ரசிகர்கள் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

- Advertisement -

Trending News