தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட பார்த்திபன் 501 ஓட்டுக்கள் பெற்ற வெற்றி பெற்றிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தனிப்பட்ட முறையில் நான் யாரிடமும் ஓட்டுக் கேட்கவில்லை. அப்படி இருந்தும் எனக்கு 501 வாக்குகளை அளித்திருக்கிறார்கள். இது அரசியல் தேர்தல் அல்ல. சங்கத்தில் தக்கவைக்க தங்கம் தர வேண்டிய அவசியமும் இல்லை. லஞ்ச லாவண்யம் கொடுத்து பதவி ஏற்பது போன்ற கேவலம் எதுவும் இல்லை.

நாம் தூய்மையாக இருந்தால்தான் நம்முடைய படங்களுக்கு வரிவிலக்கு தர லஞ்சம் கேட்பவர்களை தட்டிக் கேட்கும் துணிச்சல் நமக்கு வரும். சினிமா மூலம் அரசியலை எதிர்க்கும் தைரியம் வரும். இனி அது நடக்கும். இவ்வாறு தனது அறிக்கையில் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.