ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வருகிறது. நேற்று பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் 139 ரன்கள் சேஸிங் செய்ய வேண்டியதில், 119 ரன்களில் சுருண்டது.

பந்து வீச்சாளர்கள் திறமையாக பந்து வீசி குறைந்த ரன்னிற்குள் எதிரணியை மடக்கினாலும், பேட்ஸ்மேன்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றனர். இதனால் 12 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

பேட்ஸ்மேன்களின் தொடர்ச்சியான சொதப்பல் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

மேலும் பஞ்சாப் அணிக்கெதிரான தோல்வி குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘இந்த தோல்வி உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாதது. இதுபோல் விளையாடிய பின்னர், என்ன சொல்வதென்று தெரியவில்லை. இதுபோல் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும்போது, அதை மாற்றுவதற்கான ஏதாவது ஒன்றை எங்களால் பெறமுடியவில்லை.

நாங்கள் முயற்சி செய்த எதுவும் சரியாக அமையவில்லை. இது விசித்திரமாக உள்ளது. அணி வீரர்கள் நேர்மறையான போட்டிக்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், பெரிய ஸ்கோர் அடிப்பதற்கான வழியை கண்டுடிபிடிக்க முடியவில்லை.

நாங்கள் என்ன செய்ய விரும்பினோமோ, அதற்கு முற்றிலும் மாறாக இந்த தொடர் அமைந்துவிட்டது, இதுபோன்று விளையாடும்போது, உத்வேகத்திற்கான வழியை கண்டுபிடிப்பது மிகக்கடினம். இந்த தொடருக்கான வீரர்கள் சிறப்பாக தங்களை தயார்படுத்தினார்கள். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டார்கள். ஆனால், பேட்டிங் தலைகீழாக கவிழ்ந்து விட்டார்கள்.

ஒரு சீசனில் இதுபோன்று ஒட்டுமொத்தமாக பேட்டிங் ஆர்டர் சொதப்பிய அனுபவம் என்கு இருந்ததில்லை. இது உண்மையிலேயே வேதனை அளிக்கிறது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான தோல்வியை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. தோல்விக்கும் எதையும் குறிப்பிட்டு காட்ட முடியாது. நேர்மறையான ஆட்ட முடிவிற்கு முயற்சி செய்து, எங்களால் வெற்றி பெற முடியும். ஆனால், எங்களுக்கு ஒன்றிணைந்து அதை கொண்டு வரமுடியவில்லை.