ஜல்லிக்கட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்த நடிகர் விஷால் மன்னிப்புக் கேட்க வேண்டும் என, தமிழர் வீர விளையாட்டு மீட்புக்கழகம் வலியுறுத்தியுள்ளது.

விலங்குகள் நல அமைப்பு சார்பில் வழங்கப்பட்ட விருதினை பெற்ற நடிகர் விஷால், பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டிற்கு தடை விதித்தது வரவேற்கத்தக்கது என கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகத்தினர், விஷால் தன்னுடைய கருத்துகளை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ் திரைப்படங்களில் நடித்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கும் விஷால், தமிழர் கலாச்சாரத்தை இழிவுபடுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

விஷால் மன்னிப்பு கேட்க மறுக்கும் பட்சத்தில், அவரது படங்கள் திரையிடும் திரையரங்குகளில் கருப்புக் கொடியுடன் போராட்டம் நடத்தப்படும் என்றும், தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்