காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகாதி எல்லைப் பகுதியில் நேற்று முன்தினம் இந்திய ராணுவ நிலைகளை குறிவைத்து, பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென ராக்கெட்டுகளை வீசி, தானியங்கி துப்பாக்கிகளால் சுட்டனர். இந்திய பகுதிக்குள் சுமார் 250 மீட்டர் தூரம் வரை உள்ளே நுழைந்து பாகிஸ்தானின் சிறப்பு அதிரடிப்படை இந்த தாக்குதலை நடத்தியது பின்னர் தெரியவந்தது.

பாகிஸ்தான் நடத்திய இந்த வெறியாட்டத்தில், இந்திய ராணுவ இள நிலை அதிகாரி பரம்ஜீத் சிங், மற்றும், எல்லை பாதுகாப்பு படையின் தலைமை காவலர் பிரேம் சாகர் ஆகியோர் உயிரிழந்தனர். பின்னர் இவர்களின் உடல்களை கைப்பற்றிய பாகிஸ்தான் ராணுவத்தினர் இருவரின் தலையை வெட்டியதுடன், உடலை சிதைக்கவும் செய்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு தக்க பாடம் புகட்டுவோம் என்று இந்திய ராணுவமும் அறிவித்தது.

இந்நிலையில், இன்று அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு இந்திய எல்லைப் பாதுகாப்பு படை சரியான பதிலடியை கொடுத்தது.

அதிகாலை 2.30 மணியளவில் தொடங்கிய இந்த துப்பாக்கி சண்டையானது காலை 5:30 மணியளவில் முடிவுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. கடந்த 48 மணிநேரத்தில் பாகிஸ்தான் இரண்டாவது முறையாக எல்லையில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால், இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. எந்நேரமும், இருநாடுகளுக்கு இடையே போர் வெடிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் “இந்த நாடே உங்கள் பின்னால் உள்ளது. எனவே எதற்கும் தயங்காமல் பயங்கரவாதிகளை எதிர்த்து போராடுங்கள்” என ஊக்கம் அளித்தார். அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானுடன் போருக்கு தாயாராகுங்கள் என்று இந்திய விமான படை தளபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.