தமிழ் சினிமாவில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனுக்கு பிறகு குடும்ப செண்டிமெண்ட் படங்களை எடுத்து புகழ் பெற்றவர் வி.சேகர். நான் புடிச்ச மாப்பிள்ளை, பொண்டாட்டி சொன்ன கேட்டுக்கணும், ஒண்ணா இருக்க கத்துக்கணும், பொறந்த வீடா புகுந்த வீடா, வரவு எட்டணா செலவு பத்தணா, காலம் மாறிப்போச்சு, எல்லாமே என் பொண்டாட்டிதான், கூடி வாழ்ந்தால் கோடி நண்மை, விரலுக்கேத்த வீக்கம் என அவர் எடுத்து அனைத்து படங்களுமே 100 நாட்களை தாண்டி ஓடியவை. இவரது படங்களை போல டி.வி.சீரியல்கள் வரத் தொடங்கியதும் வி.சேகர் சீசன் முடிவுக்கு வந்தது.

சினிமா இயக்கத்திலிருந்து ஒதுங்கி இருந்த வி.சேகர் தயாரிப்பாளர் சங்கம், இயக்குனர்கள் சங்கத்தில் முக்கிய பங்கு வகித்து பணியாற்றி வந்தார். தற்போதும் இயக்குனர்கள் சங்க பொருளாளராக இருக்கிறார். தன் மகன் மார்க்சை ஹீரோவாக்க சொந்தமாக சரவண பொய்கை என்ற படத்தை தயாரித்து இயக்கினார். அந்த படத்தை வெளியிட முடியாத அளவிற்கு கடும் பொருளாதார சிக்கலில் இருந்தார். இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டடார். அவர் வீட்டிலிருந்து பழங்கால சிலைகள் மீட்கப்பட்டது.

இந்த செய்தி சினிமா உலகையே அதிரவைத்தது. அதுவரை கன்னியமான மனிதராக கருதப்பட்ட வி.சேகரின் இமேஜ் ஒரே நாளில் தவிடுபொடியானது. அதன் பிறகு ஜாமீனில் விடுதலையானார். அன்றிலிருந்து அவர் வீட்டை விட்டு வெளியில் வரவில்லை. பொது நிகழ்ச்சிகளிலோ, சங்க நிகழ்ச்சிகளிலோ கலந்து கொள்ளவில்லை. ஒரு வருடத்துக்கும் மேலாக வீட்டில் முடங்கிக் கிடந்த வி.சேகர் நேற்று வெளியில் வந்தார். காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தின்போது தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வி.சேகர் இயக்குனர் தங்கர்பச்சானுடன் இணைந்து கலந்து கொண்டார்.