பிரபல நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் என்றாலே நக்கல் நையாண்டிக்கு பெயர் போனவர். ஆனால் இன்று தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் பற்றியும் நமது வாக்குரிமை முக்கியத்துவத்தை பற்றியும் பத்திரிக்கையாளர்களை சந்தித்து தனது விளக்கத்தை பகிர்ந்துள்ளார். அவருக்கே உண்டான ஸ்டைலில் பேசியுள்ளார்.

வணக்come to வாக்குச்சாவடி !

நம் வாக்கு சாவு’அடியாகவும், சவுக்கடியாகவும், இருக்க/வலிக்க வேண்டும்….

யாருக்கு?

வாக்காளர்களுக்கு வாய்க்கரிசி போட்டுவிட்டு நம்முடைய ஆயுளில் ஐந்தாண்டை சவக்குழிக்குள் புதைத்து அதையே அஸ்திவாரமாக்கி அதன் மீது எழுப்பப்படும் ஆஸ்தி நிறைந்த அரண்மனையில், ராஜாங்கம் நடத்தத் திட்டமிடும் பொய்மை அரசியல்பேதிகளுக்கு!!!!!

கட்சிகள் யாவும் கர்ண கொடூரமாய் இரவு பகலாய் உழைக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக நம் கண்களில் சிறு’நீரை வரவழைக்கிறது. பாவம்! அவர்கள் குடும்பத்திற்கு வேறு யார் உழைப்பார்கள்?

கட்சிகளுக்கப்பால் மக்களுக்கு (தப்பித்தவறி) நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கையிருந்தால் (அப்படி யாரேனும் இருந்தால்) அவர்களைத் தேர்ந்தெடுங்கள். அவசியம் அந்த நல்லோரை(?) ஆதரியுங்கள். அப்படி நீங்கள் விரல் நீட்ட ஆளில்லையெனில், நம் விரல் நீட்டி மை பெறும் பெருமையில், தூய்மை/நேர்மை/ஆளுமை உள்ளவன் பெயர் இவ்வோட்டுச் சீட்டில் “இல்லை” என்ற அவல நிலைமையையாவது ‘குத்தி’க் காட்டுவோம்.

நோட்டே ஜெயிக்கும் என்பவர்களுக்கு NOTA-வால் கரும்புள்ளி செம்புள்ளி குத்தி அவர்களை செல்லா நோட்டாக்கி, அவர்கள் Indian டாய்லெட் செல்ல, டாட்டா காட்டுவோம் கடுங்காட்டமாய் !

8% பேர் கரன்ஸிக்காரர்களாக, நாட்டின் 92% வளத்தைச் சுரண்டி கொள்ளையடிக்கிறார்கள். மீதமுள்ள 92% மக்கள் 8% வறு’மை’யை நக்க, விரல் (நீட்டி) சூப்பிக் கொண்டிருக்கப் போகும் நிலையினி மாறவேண்டும், மாற்ற வேண்டும். மாற்றம் வேண்டும் அதை நாம் இம்முறை அரங்கேற்ற வேண்டும்.எப்படி?

ஒரு மௌனப் புரட்சி மூலம்!

நாளை இரவோடு திருவோடு ஏந்தும் (பர)பரப்புரை முடியும். அடுத்த விடியல் நம் கைகளில்! மக்களால் தேர்ந்தெடுக்கப்படுமாட்சியே மாட்சிமைமிகு மக்களாட்சி.

Ok!!!!!!!!!!!!!!!!

மக்கள் யாரைத் தேர்ந்தெடுப்பது ? கட்சித் தலைமை கை காட்டும் அத்தொகுதியின் அடி’யாட்களையா? கருவிலேயே கரை வேட்டி கட்டிக் கொண்டு அக்கட்சியின் கொடிக் கம்பங்களாக வளர்ந்து நிற்கும் திரு.தண்டங்களையா? முதலில் அதற்கே நாம் NOta காட்ட வேண்டும்.

இந்திய அரசியல் அரங்கில் முதன்முறையாக வாக்குரிமை மூலம் ஒரு சு’தந்திரப் போராட்டம் நடத்தப்பட வேண்டும். யாருக்கும் பெரும்பான்மை கிட்டாமல், ஊழல் அரசியல்வாதிகள் குழம்பித் தவித்து உணரவேண்டும் … மக்களே MAJORITY என்று.

அடுத்தடுத்து தேர்தல் வந்தால் எங்கிருந்து எடுத்தெடுத்துக் கொடுப்பார்கள் பணத்தை? கொடுத்து… அரசு கஜானாவைப் போல அவர்களின் கஜானாவும் காலியாகட்டும்.

அரசியல் என்பது மக்களுக்கான சேவை மையம் என்பதை உணர்ந்த நல்லோர்கள் வரட்டும் நம் தேசம் காக்க!

காக்க காக்க – நம் வாக்குரிமை காக்க!

இப்படிக்கு,

இராதாகிருஷ்ணன் பார்த்திபன் (திரைக்கலைஞனை மீறி விலை போகாத இந்தியக் குடிமகன்!)