விவேகம் பட டீசர் முன் கூட்டியே லீக் ஆன சம்பவத்தில் தன்னை பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட இணையதள நிறுவனத்திற்கு எடிட்டர் ரூபன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அல்டிமேட் ஸ்டார் அஜித் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ‘விவேகம்’ படத்தின் டீசர் கடந்த 11-ஆம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது. ஆனால் அறிவிக்கப்பட்ட நேரத்தில் அரை மணி நேரம் முன்னதாகவே, விவேகம் டீசர் இணையதளத்தில் லீக்கானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் விவேகம் படத்தின் டீசரை முன்னதாகவே லீக் செய்தது , அந்த படத்தின் எடிட்டரான அந்தோணி எல் ரூபன் என சினிமா செய்தி இணையதளம் ஒன்று (தமிழ் சமயம் அல்ல) செய்தி வெளியிட்டிருந்தது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்நிலையில் இந்த செய்திக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள எடிட்டர் ரூபன், ஆதாரமில்லாத, தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கக் கூடிய செய்திகளை வெளியிட்டால், மான நஷ்ட வழக்கு தொடருவேன் என அந்த குறிப்பிட்ட சினிமா இணையதளத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் அந்த சர்ச்சைக்குரிய செய்தியை தனது தளத்திலிருந்து நீக்கியுள்ள அந்த இணையதளம், தவறான செய்தியை வெளியிட்டதற்காக எடிட்டர் ரூபனிடம் மன்னிப்பும் கேட்டுள்ளது.