Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஸ்வரூபம் 2 படத்தின் மூன்று மொழி ட்ரைலரையும் வெளியிடும் முக்கிய பிரபலங்கள்…

கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் விஸ்வரூபம் 2 படத்தின் ட்ரைலரை மூன்று பிரபலங்கள் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.
2013ம் ஆண்டு தமிழில் வெளியாகிய படம் விஸ்வரூபம். தெலுங்கு மற்றும் இந்தியிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படத்தை கமலே எழுதி, இயக்கி, நாயகனாக நடித்தும் இருந்தார். ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா ஜெரெமையா, நாசர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இப்படத்தை டிடிஎச் மூலம் வெளியிட இருப்பதாக கமல் அறிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூகமான முடிவு எடுக்கப்பட்டது. தொடர்ந்து, இஸ்லாமியர்களை தீவிரவாதியாக படத்தில் சித்தரித்து இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது. சமூக அமைதியை சீர் குலைக்கும் இப்படத்தை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என கோரினர்.
இதனை தொடர்ந்து, படத்திற்கு தமிழக அரசு 15 நாட்கள் தடை விதித்தது. இந்த தடையால் அண்டைய மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் படத்தினை திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து, பலகட்ட எதிர்ப்புகளையும் மீறி கமல் படத்தை வெளியிட்டார். தென்னிந்தியாவில் இதுவரை தயாரிக்கப்பட்ட அனைத்துத் திரைப்படங்களின் வசூல் சாதனைகளை முறியடித்து முதல் இடத்தை விஸ்வரூபம் பிடித்தது. பலகட்ட தடைகளை மீறி இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிக்கப்பட்டு இருக்கிறது.
கமல்ஹாசன் மற்றும் அதுல் திவாரி இருவரும் இணைந்து இந்தப் படத்தின் கதையை எழுதியிருக்கின்றனர். ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்துடன் இணைந்து ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் படத்தை தயாரித்துள்ளார். முதல் பாகத்தில் நடித்த பிரபலங்களே இப்படத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் வரும் 11ந் தேதி மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக் படக்குழு அறிவித்துள்ளது. ட்ரைலரை இந்தியில் அமீர்கானும், தமிழில் ஸ்ருதி ஹாசனும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும் வெளியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
