தமிழ் இயக்குனர் என்பதால் ஹிந்தியில் மறைக்கப்படும் பெயர்.. அஜித் பட இயக்குனருக்கு நேர்ந்த சோதனை

தமிழ் இயக்குனர்கள் பலர் பாலிவுட் சினிமாவில் கால்பதித்து பல வெற்றிப்படங்களை வழங்கியுள்ளனர். அதேபோல் தமிழில் வெற்றி பெற்ற பல படங்கள் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் முத்திரை பதித்துள்ளது. இன்னும் பல படங்கள் ரீமேக் செய்வதற்காக காத்துக்கொண்டிருக்கின்றன. இருப்பினும் தமிழ் நடிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும் பாலிவுட் சினிமாவில் சரியான அங்கீகாரம் கிடைப்பதில்லை. அதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் நடித்த பில்லா மற்றும் ஆரம்பம் ஆகிய படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் விஷ்ணுவர்தன். இவர் முதன்முறையாகப் பாலிவுட்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். 1999 ஆம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற கார்கில் போரில் வீர மரணம் அடைந்த கேப்டன் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை கதையைப் படமாக எடுத்துள்ளார்.

மத்திய அரசு விக்ரம் பத்ராவுக்கு ராணுவத்தின் மிக உயரிய விருதான பரம் வீர் சக்ரா விருது வழங்கி கெளரவித்தது குறிப்பிடத்தக்கது. ஷேர்ஷா என்ற பெயரில் உருவாகி உள்ள இப்படத்தில் விக்ரம் பத்ரா வேடத்தில், ஹிந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா நடித்துள்ளார்.

vishnuwardan-cinemapettai
vishnuwardan-cinemapettai

இதுகுறித்து பேசிய நடிகர் சித்தார்த், “விக்ரம் பத்ராவின் வாழ்க்கைக் கதை, கண்டிப்பாக உங்களை ஊக்குவிக்கும். அத்துடன், உங்கள் முகத்தில் புன்னகையையும் கொண்டுவரும். இந்த கேரக்டரில் நான் மிகுந்த ஆர்வத்துடன் நடித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தர்மா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் படத்தின் ப்ரமோஷன்களிலும், வட இந்திய ஊடகங்களிலும் இயக்குனர் விஷ்ணுவர்தனின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டு படத்தின் நாயகன் மற்றும் தயாரிப்பாளர் கரண் ஜோஹர் ஆகிய இருவர்களின் பெயர் மட்டுமே முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் இயக்குனர் என்பதால் அவரது பெயரை எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடாதது மிகவும் கண்டிக்கத்தக்கது என ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்