Tamil Cinema News | சினிமா செய்திகள்
தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் அதிரடி காட்டிய விஷால்.

தெலுங்கில் வெளியாகி இருக்கும் அபிமன்யுடு படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் ஒரு ரூபாயை விவசாயிகளுக்கு கொடுக்க இருப்பதாக நடிகர் விஷால் அறிவித்தார்.
நடிகர் சங்க பொதுச்செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் இருக்கும் விஷால் சமூக பிரச்சனைகளில் தன் கருத்தை தவறாமல் தெரிவித்து வருகிறார். திரைத்துறையிலும் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்துள்ளார். அதன்படி, நலிந்த கலைஞர்களுக்கு நிதிகளை அடிக்கடி தருவதை தவறாமல் செய்து வருகிறார். கோலிவுட் சினிமாவிற்கே சிம்மசொப்பனமாக இருக்கும் தமிழ் ராக்கர்ஸை கட்டுப்படுத்தவும் போராடி வருகிறார்.
இதன் வழியில், கடந்த வருடம் திரையரங்கில் விற்பனையாகும் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஒரு ரூபாயை விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டும் என அறிவித்தார். இந்த திட்டத்திற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், விஷால் தன் நடிப்பில் வெளியான துப்புரவாளன் படத்தின் டிக்கெட்களின் ஒரு ரூபாயை விவசாயிகளுக்கு கொடுக்க முடிவெடுத்தார். அதையும் செய்து முடித்தார். விஷால் தான் அப்படத்தின் தயாரிப்பாளர் என்பதால் அப்படத்திற்கு பெரிதாக எதிர்ப்புகள் வரவில்லை. இருந்தும், அவரை தவற தமிழில் வெளியான மற்ற படங்களுக்கு இந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், விஷால் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படம் தெலுங்கில் அபிமன்யுடு என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. படத்திற்கு தமிழ் ரசிகர்களிடம் கிடைத்த அதே வரவேற்பு தெலுங்கிலும் கிடைத்துள்ளது. இதனால், படத்திற்கு இதுவரை சுமார் ரூ 12 கோடி வசூலாகி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனை தொடர்ந்து, படத்தின் வெற்றி விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வில் பேசிய விஷால், படத்திற்காக விற்பனையான ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் ஒரு ரூபாயை விவசாயிகளுக்கு கொடுக்க இருக்கிறேன் என அறிவித்துள்ளார். இது பல தரப்பிலும் வரவேற்பை பெற்றுள்ளது.
