Tamil Cinema News | சினிமா செய்திகள்
காலா பிரச்சனையை கர்நாடகா முதல்வர் வரை எடுத்து செல்லும் விஷால்..

கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட தடை விதித்திருக்கும் நிலையில், இந்த பிரச்சனையை கர்நாடகா முதல்வர் குமாரசாமி வரை எடுத்து செல்வோம் என விஷால் தெரிவித்து இருக்கிறார்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் காலா. ரஜினிகாந்த் நடித்திருக்கிறார். வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தனுஷ் இப்படத்தை தயாரித்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த மாதத்தில் வெளியிடப்பட இருக்கும் காலா படத்தை, கர்நாடகாவில் வெளியிடவிட மாட்டோம் என சில அமைப்புகள் அறிவித்துள்ளது. இதனால், மாநிலத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் கர்நாடகா ஃபிலிம் சேம்பர் படத்தை வெளியிட தடை விதித்தது. இதனால், அடுத்த கட்ட நடவடிக்கையை தனுஷ் மும்முரமாக தொடங்கினார். அவருக்கு தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கமும் பெரிய ஒத்துழைப்பு தந்துள்ளதாக தெரிகிறது.
தமிழ் தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால், காலா படம் வெளியாவது குறித்து கர்நாடகா வர்த்தக சபையுடன் நேற்று பேச்சுவார்த்தையில் இறங்கினார். ஆனால், அதன் முடிவு இன்னும் எட்டப்படவில்லை. இதுகுறித்து, கருத்து தெரிவித்துள்ள விஷால், சினிமா வேறு, அரசியல் வேறு. ‘காலா’ படம் ஒரு தயாரிப்பாளரால் தயாரிக்கப்பட்டு, அதில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடித்திருக்கிறார். இது திரைப்படம். அவர் அரசியலுக்கு வருவது வேறு.
‘காலா’ படம் எல்லா இடங்களிலும் நல்லபடியாக வெளியாக வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். காவிரிப் பிரச்சினை பற்றி ரஜினி சார், கமல் சார், சிம்பு மற்றும் நான் கூடப் பேசியிருக்கிறேன். அது தனிப்பட்ட கருத்து. அது ஒரு படத்தைப் பாதிக்கக்கூடாது. என்னைப் பார்த்து, ‘நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?’ என்று கேட்டால், நான் ஒரு பதில் சொல்வேன்; மற்ற நடிகர்கள் வேறொரு பதில் சொல்வார்கள். அதுப்போல தான் ரஜினியும். இந்த பிரச்சனை தொடரும் பட்சத்தில் காலாவை வெளியிட கர்நாடகா முதலமைச்சர் குமாரசாமியை விரைவில் சந்திக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், ரஜினிகாந்த் கர்நாடகா ரசிகர் மன்றத்தினர் நேற்று முதல்வர் குமாரசாமியை பார்த்து காலா படத்தை தடையில்லாமல் ரிலீஸ் செய்ய வேண்டும் என மனு கொடுத்து இருக்கிறார்கள். ஜூன் முதல் வாரத்தில் வெளியிடப்பட இருக்கும் காலா பிரச்சனை, விரைவில் முடியுமா என பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கர்நாடகா போரட்ட அமைப்பு காலா படத்தை வெளியிட ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கவேண்டும் என கோரிக்கை வைக்கலாம் என சினிமா ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதேப்போல, கர்நாடகாவிற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த சத்யராஜின், பாகுபலி படத்தை வெளியிட அவர் மன்னிப்பு கேட்க கோரிக்கை வைத்ததும், அவரும் தன்னால் பட தயாரிப்பாளருக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என மன்னிப்பு கேட்டதும் குறிப்பிடத்தக்கது.
