ஐம்பது லட்சத்தில் முடிய வேண்டிய படத்தை, ஒரு கோடிக்கு இழுத்துவிட்டு, தயாரிப்பாளரை தெருக்கோடிக்கு தள்ளுகிற அரக்கன்தான் சினிமா தொழிலாளர்களின் அமைப்பான பெப்ஸி. ஒரு காட்சியை எடுக்க 25 பேர் போதும் என்று வைத்துக் கொள்ளுங்களேன். ‘அதெல்லாம் முடியாது. பெப்ஸி விதிப்படி ஒவ்வொரு பிரிவிலேர்ந்தும் இத்தனை பேர் ஷுட்டிங் வருவாங்க. எல்லாருக்கும் தனித்தனியா சம்பளம், பேட்டா வேணும்’ என்று மிரட்டுவார்கள். குறைந்தது 80 பேராவது கூடிவிடுவார்கள். ‘முடியாது’ என்று மறுத்தால், ஒரு நாள் கூட நிம்மதியாக ஷுட்டிங் நடத்த முடியாது. நடத்தவும் விடமாட்டார்கள்.

கால்ஷீட் நேரத்திலிருந்து அதிகப்படியாக ஐந்து நிமிஷம் போனால் கூட, ‘தனியா முழு பேட்டா வேணும்’ என்று மல்லுக்கு நின்று வாங்குவார்கள். வெளியூர் படப்பிடிப்புக்கு கிளம்பினால் சாப்பாடு, டிக்கெட், என்று எல்லா வசதிகளும் செய்து கொடுத்தாலும் ‘டிராவல் பேட்டா’ என்று தனியாக ஒரு பில் போடுவார்கள். தூங்கிக் கொண்டு வருவதற்கு கூட சம்பளம் கேட்கும் இவர்களின் அராஜகத்தை சகிக்க முடியாமல் போராடுகிறவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை கதற கதற அழ வைப்பதில் தனி சுகம் காண்கிற அமைப்புதான் பெப்ஸி.

vishalதூங்குவதற்கு கொடுத்த சிங்கிள் பேட்டாவை இப்போது டபுள் பேட்டாவாக ஆக்கச் சொல்லி ஒரு படத்தின் ஷுட்டிங்கையே நிறுத்திவிட்டது இந்த கும்பல். இதில் ஆரம்பித்த பிரச்சனை, தயாரிப்பாளர் சங்கத்தில் பூதாகரமாக வெடிக்க, அதிரடியாக சில முடிவுகளை எடுத்தது விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம். இந்த கூட்டத்தில் விஷாலுக்கு எதிராக முஷ்டியை உயர்த்திக் கொண்டிருந்த கலைப்புலி தாணு, கே.ஆர் போன்றவர்களும் கலந்து கொண்டார்கள்.

“இனிமேல் யாரும் பெப்ஸி அமைப்பை சேர்ந்தவர்களை மட்டும்தான் வைத்துக் கொண்டு ஷுட்டிங் நடத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை. தயாரிப்பாளருக்கு எவ்வளவு பேர் தேவையோ? அவர்களை மட்டும் வைத்துக் கொண்டு படப்பிடிப்பு நடத்தலாம். அவர்கள் பெப்ஸி அமைப்பில் இல்லாதவர்களாகவும் இருக்கலாம். படப்பிடிப்பு ஏரியாவுக்கு வந்து யாராவது தகராறு செய்தால், அவர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் பாதுகாப்பு கொடுக்கும். படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க உதவும்” என்று கூறிவிட்டார் விஷால்.

வரலாற்று சிறப்புமிக்க இந்த முடிவை எடுப்பதற்கு துளியும் தயங்காத விஷாலின் துணிச்சலை, எல்லா தயாரிப்பாளர்களும் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக விஷாலுக்கு எதிராக அவ்வப்போது ஏவுகணைகளை வீசி வந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி கூட விஷாலை மனதார பாராட்டிவிட்டார்.

ஆக…. இன்று முதல் விஷால் ‘இரும்புக் கை மாயாவி’ என்று அழைக்கப்படுவாராக…!