இளையதளபதி விஜய்யை வைத்து போக்கிரி என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்ததன் மூலம் ஹிட் இயக்குநர் லிஸ்ட்டில் சேர்ந்தவர் பிரபுதேவா. போக்கிரி படத்துக்குப் பிறகு வில்லு, எங்கேயும் காதல், விஷாலை வைத்து வெடி என அடுத்து அவர் எடுத்த திரைப்படங்கள் போக்கிரி படத்தை போல் வெடிக்காததால் பாலிவுட் பக்கம் சென்று விட்டார்.

அங்கு சில வெற்றி படங்களைக் கொடுத்தவர், தேவி படத்தில் நடித்து மீண்டும் தமிழில் பரவலாக பேசப்பட்டு வருகிறார். இந்நிலையில் தமிழில் அவர் அடுத்து இயக்கும் படத்தைப் பற்றி செய்திகளும் வந்து கொண்டே இருக்கின்றன.

விஷால் மற்றும் கார்த்தியை வைத்து கருப்பு ராஜா வெள்ளை ராஜா என்ற ஒரு படத்தை பிரபுதேவா இயக்கப்போகிறார் என்று தகவல்கள் வந்துள்ளன. இதே பிரபுதேவா வெடி படத்தை இயக்கிய பின்னர் தனுஷ் மற்றும் சிம்புவை வைத்து அக்னி நட்சத்திரம் படத்தின் ரீமேக்கிற்கு ப்ளான் பண்ணினார். சிம்புவும் தனுஷும் ஒத்துவராததால் அந்த படத்தை கைவிட்டுவிட்டு பாலிவுட்டிற்கு சென்றார்.

மறுபடியும் பிரபுதேவா இரண்டு ஹீரோ சம்பந்தப்பட்ட கதையை கையில் எடுத்திருப்பதால், இந்த படம் அக்னி நட்சத்திரம் படத்தின் ரீமேக்காக இருக்குமோ என்று ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். விரைவில் இந்தப் படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.