நடிகர் கமல்ஹாசனைத் தொடர்ந்து, விஷாலும் சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்க இருக்கிறார்.

vishal
vishal

வெள்ளித்திரையில் முத்திரை பதித்த உலக நாயகன் கமல்ஹாசன், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோவைத் தொகுத்து வழங்கினார். இந்தி சேனல்களில் கிட்டத்தட்ட 8 சீசன்கள் கடந்துவிட்ட நிலையில், முதன்முறையாக தமிழில் விஜய் டிவியின் அந்த ஷோ ஒளிபரப்பானது. 15-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் ஒரே வீட்டில், எந்தவித வெளியுலகத் தொடர்பும் இல்லாமல் இருப்பது போன்ற கான்சப்டுடன் வடிவமைக்கப்பட்ட அந்த நிகழ்ச்சி, சின்னத்திரை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஓவியா, கஞ்சா கருப்பு, சக்தி, காயத்ரி ரகுராம், ஹாரத்தி என பிரபலங்கள் வரிசைகட்டினாலும், பிக்பாஸ் முதல் சீசன் டைட்டிலை ஆரவ் தட்டிச் சென்றார்.

முதல் சீசன் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீசனுக்கான வேலைகளில் சேனல் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதல் சீசனைப் போலவே இரண்டாவது சீசனையும் நடிகர் கமலே தொகுத்து வழங்குகிறார். இதற்கான ப்ரோமோ சமீபத்தில் வெளியிடப்பட்டது. தற்போது, பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்குபெறப்போகும் பிரபலங்கள் குறித்து சோஷியல் மீடியாவில் பெரும் விவாதமே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில், நடிகர் கமலைத் தொடர்ந்து விஷாலும் சின்னத்திரையில் அறிமுகமாக இருக்கிறார். பிரபலங்கள் பங்குபெற்று, அவர்களுடன் உரையாடும் வகையிலான நிகழ்ச்சியை நடிகர் விஷால் தொகுத்து வழங்க இருக்கிறார். வெறும் உரையாடல் நிகழ்ச்சியாக இல்லாமல், கஷ்டப்படும் மக்களுக்கு உதவும் வகையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் மூலம் நிதி திரட்டப்பட்டு உரியவர்களுக்குக் கொண்டு சேர்க்கப்படும் என்கிறார்.

vishal

தெலுங்கில் நடிகை லஷ்மி மஞ்சு தொகுத்து வழங்கும் மீமு சைதம் நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இந்த நிகழ்ச்சி விஷாலுக்காக வடிவமைக்கப்பட இருக்கிறதாம். இதற்கான ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சின்னத்திரை நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் தகவலை நடிகர் விஷாலும் உறுதிப்படுத்தியுள்ளார். எந்த டிவி சேனலில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்பது உள்ளிட்ட தகவல்கள் விரைவில் அதிகரபூர்வமாக வெளியாகும் என்று தெரிகிறது.