‘துப்பறிவாளன்’ படத்தைத் தொடர்ந்து ‘சண்டக்கோழி 2’ மற்றும் ‘இரும்புத்திரை’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஷால். இவ்விரண்டு படங்களையுமே விஷால் தயாரித்தும் வருவது குறிப்பிடத்தக்கது. மித்ரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘இரும்புத்திரை’ படத்தில் சமந்தா, அர்ஜுன், விஷாலுடன் நடித்து வருகிறார்கள்.இசை யுவன் ஷங்கர் ராஜா. திரையுலகில் அர்ஜுனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் விஷால். இப்பொழுது பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் அர்ஜுனுடன் இணைந்துள்ளார்.

‘இரும்புத்திரை’ படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் பொங்கல் வெளியீடு என்று அறிவித்திருந்தது படக்குழு.இந்நிலையில், ‘இரும்புத்திரை’ படத்தின் புதிய போஸ்டரில் படம்  ஜனவரி 26-ம் தேதி வெளியீடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இப்படம் பற்றி நாளிதழ் ஒன்றிற்கு இயக்குனர் அளித்த பேட்டியின் தொகுப்பு “படத்தின் கதையை முதலில் நான் விஷாலிடம் கூறும்போது அவர்  கதை பிடித்திருந்தால் வேறு ஒருவரை கதாநாயகனாக நடிக்க வைத்து தயாரிக்கும் எண்ணத்தில் தான் இருந்தார். பின்னர்  நான் கதையை சொல்லி முடித்ததும், ‘இதில் நானே நடிக்கிறேன், அதுவும்  வில்லன் பாத்திரத்தில்’ என்றார். அவர் அப்படி கூற காரணம் அந்த வில்லன் கதாபாத்திரம் அவ்வளவு பவர்ஃபுல்லானது.

கதையில் அவரது கேரக்டரில் நிறைய மாற்றங்கள் செய்தேன். முதலில் வழக்கமான ஒரு ஹீரோவாக இருந்த அவரது கதாபாத்திரத்தை மிலிட்டரி மேன் கதாபாத்திரமகாக மாற்றினேன். இந்த கதாபாத்திரம் நீங்கள்  அறியாத பல விஷயங்களை பேசும். இப்படத்தில்  விஷால், சமந்தா, அர்ஜுன் கதாபாத்திரங்கள் மாறுபட்டதாக இருக்கும்’’ என்றார்.