புதுமுக இயக்குநர் மித்ரன் இயக்கத்தில் விஷால், அர்ஜூன், சமந்தா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் இரும்புத் திரை. ஜனவரி மாதமே ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது. இரும்புத் திரை வரும் 11-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெய்லருக்கு ரசிகர்கள் சிறப்பான வரவேற்புக் கொடுத்துள்ளனர். ஆன்லைனில் நடக்கும் மோசடிகள் குறித்தும், அதன் மூலம் ஏற்படும் பாதிப்புகளை மையப்படுத்தி படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரதி தேவி என்கிற சைக்காலஜிஸ்ட் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார்.

படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகை சமந்தா கலந்துகொண்டு பேசி வருகிறார். அந்தவகையில் படம் குறித்து பேசிய சமந்தா, `பொதுவாக நான் புதுமுக இயக்குநர்களின் படத்தில் நடிப்பதில்லை. ஆனால், மித்ரன் கதை சொன்ன விதத்திலேயே அவர் மிகவும் திறமைசாலி என்பதைக் கண்டுகொண்டேன். ஸ்கிரிப்டின் மீதான நம்பிக்கையிலேயே இந்த படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொண்டேன்.

அதேபோல், ஆன்லைன் மோசடிகளால் இதுவரை நான் பாதிக்கப்பட்டதில்லை. ஆனால், எனது நண்பர்கள் பலரும் ஆன்லைன் மோசடி மூலம் லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர். இன்றைய சூழலில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களுக்கு நாம் அடிமையாக இருக்கிறோம். அது தவறு. அறிவுப்பூர்வமாக நான் சமூக வலைதளங்களைப் பயன்படுத்த வேண்டும். சமூக வலைதளங்களால் ஏற்படும் பிரச்னைகள் குறித்து பேசும் இரும்புத் திரை படம், அதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ளது’’ என்றார்.

Irumbu-Thirai

விஷால் மற்றும் அர்ஜூன் குறித்து பேசிய சமந்தா, ‘அவர்கள் இருவருமே ஒவ்வொரு வகையில் ஹாட்டஸ்ட் ஹீரோக்கள்தான். அவர்களுடன் நடிக்க எனக்கு வாய்ப்புக் கிடைத்தது அதிர்ஷ்டம். இரும்புத் திரை படத்தின் கதையைக் கேட்ட பின்னர் நான் ஷாக்காகி விட்டேன். அதன்பிறகு மொபைலைத் தொடக்கூட எனக்கு அச்சம் ஏற்பட்டு விட்டது’ என்று கூறினார்.