இம்மாதம் 30 தேதிக்குப்பின் தமிழ் திரையுலகத்தில் ஸ்டிரைக் என்று அறிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால். (பஸ்கள் ஓடாது. ஆட்டோக்கள் நகரா… ச்சே ச்சே பழக்க தோஷம்) படப்பிடிப்புகள் கிடையாது. பட ரிலீஸ்கள் கிடையாது. எடுத்த படங்களுக்கான பின் தயாரிப்பு பணிகளுக்கு கூட ஸ்டாப் பட்டனை அழுத்திவிட்டார் விஷால். இருந்தாலும் தண்ணீர் குழாய் புட்டுக் கொண்ட மாதிரி, ‘நாங்க படத்தை தியேட்டர்ல போடுவோம். நிறுத்த முடியாது’ என்று புட்டுக் கொண்டது திரைப்பட விநியோகஸ்தர் கூட்டமைப்பும், திரையரங்க உரிமையாளர் சங்கமும்.

இந்த நேரத்தில் படு கூலாக இன்னொரு விஷயம் அரங்கேற திட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அதுதான் ரஜினியும் பா ரஞ்சித்தும் இணையும் புதிய படத்திற்கான ஷுட்டிங். இம்மாதம் 28 ந் தேதி சென்னை ஈவிபி ஸ்டூடியோவில் நிர்மாணிக்கப்பட்ட மும்பை தாராவி செட்டில் படப்பிடிப்பை கன ஜோராக நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம்.

தயாரிப்பாளர் சங்கமோ, விநியோகஸ்தர் சங்கமோ ரஜினியை மட்டும் கட்டுப்படுத்தாது போலிருக்கிறது. ஒருவேளை விஷால், ரஜினி மற்றும் படத்தின் தயாரிப்பாளர் தனுஷிடம் பேசி படப்பிடிப்பை ரத்து செய்யக் கூடும். அது நடக்கிற வரைக்கும் இதுதான் இப்போதைய நிகழ்ச்சி நிரல்!

ஒருவேளை விஷால் பேச்சை ரஜினியும் கேட்காவிட்டால், அவருக்கு ரெட் போடுகிற தைரியம் விஷாலுக்கு இருக்கிறதா? பரபரப்பு கவுன்ட்டவுன்!