அப்பா ஜிகே ரெட்டியின் பேனரில் நடித்து வந்த விஷால், ஒரு கட்டத்தில் வெற்றி எட்டாக்கனியாகிப் போனதால் சொந்தமாக விஷால் பிலிம் பேக்டரியை ஆரம்பித்தார்.

அந்த பேனரில் வெளியான முதல் படம் பாண்டியநாடு. பெரிய வெற்றிப் படம். அதன் பிறகும் அதே பேனரில் மேலும் 5 படங்களைத் தயாரித்தார். முதலுக்கு மோசமில்லை.

இடையில் வெளி கம்பெனிகளுக்கு இரு படங்கள் செய்து கொடுத்த விஷால், மீண்டும் தன் விஷால் பிலிம் பேக்டரி மூலம் 7 வது படத்தைத் தயாரிக்கிறார்.

இன்னமும் பெயரிடப்படாத இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஒரு பக்கா ஆக்ஷன் த்ரில்லராக இந்தப் படம் உருவாகவிருப்பதாகக் கூறுகிறார் இயக்குநர் மித்ரன். படத்தின் இதர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.